ராமநாதபுரத்தில் வழிப்பறி, திருட்டு அதிகரிப்பு : போலீஸ் ரோந்தில் தொய்வால் பொதுமக்கள் அச்சம்

14/09/2012 09:08

 

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் வழிப்பறி எண்ணிக்கை, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், அதிகரித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர். வழிப்பறிக்காரர்களிடம், நகைகளை போராடி பாதுகாத்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி, கால்நடை திருட்டு போன்றவை சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. மாலை நேரங்களில் கோயில்களுக்கு செல்லும் பெண்களை குறிவைத்து, வழிப்பறி நடப்பதும், சில இடங்களில் பெண்கள் போராடி, நகைகளை பாதுகாத்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

2011ல், 15 வழிப்பறி வழக்குகள் பதியப்பட்டு, இதில் 10 வழக்குகள் மட்டும் கண்டறியப்பட்டுள்ளன. இந்தாண்டில் இதுவரை, 38 வழிப்பறி வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2011ல் திருட்டு வழக்குகள் 237ல் 128 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2012ல் 217 வழக்குகள் பதியப்பட்டு 142 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருட்டு மற்றும் வழிப்பறி, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவில் இரவு 7 மணிக்கு தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் நகையை, பைக்கில் வந்த இருவர் பறிக்க முயன்றனர். நடுரோட்டில் பெண் போராடியதால், வழிப்பறி செய்ய முயன்றவர்கள் தப்பிஓடிவிட்டனர். நகை பறிபோகாததால் புகார் செய்யவில்லை.

இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் அரங்கேறி உள்ளது.முன்பு இரவில், போலீசார் டூவீலர்கள் மற்றும் வேனில் ரோந்து சுற்றிவந்தனர். ஒரளவு வழிப்பறி, திருட்டு குறைவாகவே இருந்தது. தற்போது போலீசாரின் ரோந்து பெயரளவில் உள்ளதால், திருட்டு அதிகரித்துவிட்டது.ராமநாதபுரம் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, பரமக்குடி பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த போலீசாரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டோம். இதனால், ரோந்து செல்லமுடியவில்லை. சந்தேகநபர்கள் சுற்றுவது குறித்து, போன் செய்தால், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்துவிடுவோம். அதிக நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும், என்றார்.