ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு

21/11/2010 14:34

நஷ்டஈடு வழங்காத ராமநாதபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தானில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாஸ்டர் பிளான் கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ராமநாதபுரத்தை சேர்ந்த சுந்தரி என்பவருக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1985 ம் ஆண்டு நில ஆர்ஜிதம் செய்தனர்.

இந்த நிலத்திற்கு உரிய பணம் கேட்டு 1988 ம் ஆண்டு சுந்தரி தரப்பில் ராமநாதபுரம் சப் - கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், நில ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலத்திற்கு, ஒரு சென்ட்-க்கு ரூ 800 உடன் வட்டித் தொகையும் சேர்ந்து 1991 டிசம்பர் 10 ம் தேதிக்குள் வழங்குமாறு நீதி மன்றம் தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஆர்.டி.ஓ. தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, முன்பு குறிப்பிட்ட பாதித்தொகையை கோர்ட்டில் ஆர்.டி.ஓ. செலுத்தினார்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதி மன்றம் சென்ட் ஒன்றுக்கு ரூ 667 மற்றும் வட்டியுடன் தொகையை வழங்க உத்தரவிட்டது.

பாக்கி தொகை கேட்டு 2004 ம் ஆண்டு சுந்தரி ராமநாதபுரம் சப்கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆறு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், பாக்கித்தொகை ரூ 2 லட்சத்து 1203 ரூபாயை ஆர்.டி.ஒ. தரப்பில் செலுத்தவில்லை.

இதனையடுத்து, ஆர்.டி.ஓ. அலுவலக மேஜை , நாற்காலிகளை ஜப்தி செய்ய ராமநாதபுரம் சப் - கோர்ட் உத்தரவிட்டது.

oneindia.in