ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை

22/08/2010 00:05

ராமநாதபுரத்தில், கேணிக்கரைப் பகுதியில் தேங்கிய மழை நீரில் மிதந்து செல்லும் ஆட்டோ.

ராமநாதபுரம், தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை கனமழை பெய்தது.

 

ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 170 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மழை ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

தென்மேற்குப் பருவ மழை, கர்நாடகத்தின் தெற்கு பகுதிகளில் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தமிழகம், புதுவை, ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் தெற்குப் பகுதிகளில் பரவலாக அடுத்த 48 மணி நேரத்துக்கு (திங்கள்கிழமை காலை வரை) மழை பெய்யக் கூடும் என்று 
அறிவிக்கப்பட்டுள்ளது. (ராமநாதபுரத்தில், கேணிக்கரைப் பகுதியில் தேங்கிய மழை நீரில் மிதந்து செல்லும் ஆட்டோ படத்தில்)

 

மேகக் கூட்டங்களின் சுழற்சி: இந்த நிலையில், தெற்கு ஆந்திரம் முதல் தமிழகம் வரை வளி (காற்று) மண்டலத்தில் மேகக் கூட்டங்களின் சுழற்சி காரணமாகவும், ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகம், புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன் எதிரொலியாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகவும் வாய்ப்புள்ளதாலும் பலத்த மழை தொடரக் கூடும். வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் இயல்பாக இருந்தாலும், தென் மாவட்ட கடலோரப் பகுதிகளில் வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த கடற்காற்று வீசக் கூடும். இதனால், ராட்சத அலைகள் வீசக் கூடும்.

 

பலத்த மழை: தமிழத்தில் விழுப்புரம் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சனிக்கிழமை விடிய, விடிய பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. இதில், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் மிக அதிக அளவாக 170 மில்லி மீட்டர் மழை பெய்தது. இதற்கு அடுத்தபடியாக, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் 150 மில்லி மீட்டர் அளவுக்கு பலத்த மழை பெய்தது.

 

இதர இடங்களில் புதன்கிழமை காலை 8.30 மணி வரை பதிவாகியுள்ள மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்):

 

திருக்கோவிலூர், தர்மபுரி, ஆரோக்கியவரம் 110, அதிராமபட்டினம், தொண்டி 90, பொன்னேரி, தேன்கனிக்கோட்டை 80, தொழுதூர், வேதாரண்யம், விருத்தாச்சலம், வேதாரண்யம், பாலக்கோடு, கோத்தகிரி, திண்டுக்கல் 70. தாமரைப்பாக்கம், ஒட்டப்பிடாரம், பாரூர், கோவை, அரியலூர் 60.

 

வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.

 

சென்னையில்: நகரில் முற்பகல் 12 மணி முதல் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு,விட்டு மழை பெய்தது.

 

ஞாயிற்றுக்கிழமை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும். பகலில் வெப்ப நிலை 86 டிகிரிக்கும் குறைவாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

dinamani