ராமேஸ்வரத்தில் சூறாவளி; கடும் பாதிப்பு!

21/12/2011 11:17

ராமேஸ்வரத்தில் கடல் பகுதியில் வீசும் கடும் சூறாவளி காற்றால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் முடங்கியுள்ளனர்.
 
ராமேசுவரத்தில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் நகரின் பல்வேறு இடங்களில் உள்ள  வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்திருந்தது. அதை தொடர்ந்து நகர சபை நிர்வாகம் மூலம் நகரின் பல்வேறு பகுதிகளில்  மோட்டார்கள் மூலம் வீடுகளை சூழ்ந்த மழை வெள்ளம் வெளியேற்றப் பட்டு வந்தது. இதனால் வீடுகளை சூழ்ந்திருந்த மழை நீர் குறைந்து மக்களும் சகஜமான நிலைக்கு திரும்பி வந்தனர்.
 
இந்நிலையில் ராமேசுவரத்தில் நேற்று முன் தினம் இரவு 10 மணிக்கு தொடங்கிய மழையானது நேற்று அதிகாலை வரையிலும் பலத்த சூறாவளி காற்றுடன் பலத்த மழையாக பெய்தது. இப்பலத்த மழையால் திருவள்ளுவர் நகர், அண்ணா நகர், காந்தி நகர், இந்திரா நகர், விசுவாச நகர், முனியசாமி கோவில் தெரு, மாந்தோப்பு, ரயில்வே பீடர் ரோடு, பள்ளி வாசல் தெரு, ராம தீர்த்தம் தெற்கு என நகரில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்து நிற்கின்றது. இதைத் தவிர 200 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள்ளும் மழை நீர் புகுந்ததால் வீடுகளில் உள்ளவர்கள் கை குழந்தைகளுடன் வீடுகளைக் காலி செய்து பாதுகாப்பான இடத்திற்குத் தஞ்சமடைந்துள்ளனர்.
 
இதை தொடர்ந்து நேற்று ராமேசுவரம் நகர சபை தலைவர் அர்ச்சுணன், துணை தலைவர் குணசேகரன், பொறியாளர் ரத்னவேல், கவுன்சிலர்கள் நாகசாமி, சரவணன் ஆகியோர் நகரின் பல்வேறு இடங்களில் வீடுகளைச் சூழ்ந்திருந்த மழை வெள்ளத்தை பார்வையிட்டு பல இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ராமேசுவரத்தில் பொது மக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது.
 
இதே போல் ராமேசுவரத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் இரவு பெய்த பலத்த மழையால் சீதா தீர்த்தத்தின் தடுப்புச் சுவர் முற்றிலும் இடிந்து தீர்த்தத்தின் உள்ளே விழுந்தது. ராமேசுவரத்தில் ஒரே நாள் இரவில் 106.3 மில்லி மீட்டர் மழையும், தங்கச்சி மடத்தில் 98.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. பாம்பனில் 86.8 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.
 
ராமேசுவரம் பகுதியில் தொடர்ந்து நேற்று 55 லிருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாகவே காணப்பட்டு வருகின்றது. குறிப்பாக பாம்பனில் ரயில் பாலத்தில் ரயில்கள் செல்லும் போது ரயில் என்ஜின், பெட்டிகளையும் தொட்டுச் செல்லும் அளவிற்குக் கடல் அலைகள் வேகமாக சீறி எழுகின்றன. பலத்த காற்று, கடல் கொந்தளிப்பாலும் ராமேசுவரம், பாம்பன்,மண்டபம், தனுஸ்கோடி ஆகிய பகுதிகளில் சுமார் 2000 க்கும் மேற்பட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளும் மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை.


www.inneram.com