ரூ. 1கோடி கொடுத்து மீட்கப்பட்ட கீர்த்தி வாசன், குற்றவாளிகளை பிடித்தது காவல்துறை

03/11/2010 12:52

சென்னையில் கடத்தப்பட்ட மாணவன் கீர்த்தி வாசனை பணம் கொடுத்தே கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டோம் என்றும், சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே தங்களுடைய குறிக்கோளாக இருந்தது என்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறினார்.

சென்னை அண்ணா நகர் இசட் பிளாக் 7வது குறுக்குத் தெரு‌வில் வசித்து வருபவர் கிரானைட் நிறுவனம் நடத்திவரும் ரமேஷ். இவரது மகன் கீர்த்தி வாசன் (வயது 13) முகப்பேர் டி.ஏ.வி. பள்ளியில் 9வது வகுப்பு படித்து வருகிறார்.

வழக்கமாக பள்ளிக்கு காரில்தான் கீர்த்தி வாசன் சென்று வருவான். நேற்றும் பள்ளி முடிந்து மாலை 3.30 மணியளவில் தனது வீட்டிற்குத் திரும்புவதற்காக காரில் ஏறும் போது திடீரென இரண்டு பேர் உள்ளே புகுந்து உட்கார்ந்துகொண்டு ஓட்டுநரை மிரட்டி காரை ஓட்டச் சொல்லியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் ஓட்டுநரை இறக்கிவிட்டு காருடன் சிறுவன் கீர்த்தி வாசனை கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து ‌கீ‌ர்‌த்‌தி வாச‌ன் கட‌த்த‌ல் கு‌றி‌த்து காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே கோவையில் சிறுவர்கள் இருவர் கடத்தி கொல்லப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை தீவிரமாக மாணவனை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ஈடுபட்டுவந்தது.

இந்நிலையில், மாணவன் கீர்த்தி வாசன் இன்று பத்திரமாக மீட்கப்பட்டான்.

இதனைத்தொடர்ந்து சென்னை மாநகரக் காவல் ஆணையர் இராஜேந்திரன் மாணவனை மீட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாணவன் கீர்த்தி வாசனும் உடனிருந்தார்.

கடத்தல் குறித்த தகவல் அறிந்ததும் இரண்டு பேர் கொண்ட தலைமையில் தனிப்படைகள் அமைத்து மாணவன் கீர்த்தி வாசனை தேடி மீட்கும் பணியில் ஈடுபட்டோம். நேற்று இரவு முதல் சிறுவனுடைய தந்தையுடனும், கடத்தல்காரர்கள் செலஃபோன் மூலமாக சிறுவனுடனும் தொடர்ந்து பேசினோம்.

இதற்கு கீர்த்தி வாசனின் தந்தை பெரும் உதவியாக இருந்தார். இதில் முக்கிய விஷயமென்னவென்றால், கடத்தல்கார்கள் சென்னையை விட்டு வெளியே போகாவண்ணம் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு தடுத்தனர்.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருப்பதைக் கண்டறிந்த பின்னர், அவர்களிடம் பேசி ஒரு குறிப்பிட்ட குறைந்த தொகையை அளித்தே சிறுவனை மீட்டோம். எங்களைப் பொறுத்தவரையில் சிறுவனை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதே குறிக்கோளாக இருந்தது. அதனை சாதித்துவிட்டோம் என்று கூறினார்.

கட‌த்த‌ல்கார‌ர்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்‌தி‌ல் இரு‌ப்பது தெ‌ரி‌ந்தது‌ம் அ‌ங்கு சோதனை நட‌த்‌தி‌யிரு‌க்கலா‌ம். ஆனா‌ல், ‌சிறுவனை ப‌த்‌திரமாக ‌மீ‌‌ட்க வேண‌்டு‌ம் எ‌ன்பதா‌ல் அதனை‌த் த‌வி‌ர்‌த்தோ‌ம் எ‌ன்று‌ ஆணைய‌ர் கூ‌றினா‌ர்.

எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, அது முக்கியமில்லை. ஆனால் பெரிய தொகை கொடுக்கப்படவில்லை. குறைந்த பணமே கொடுத்து மீட்டோம் என்று பதிலளித்தார்.

மேலும், கடத்தியவர்கள் இரண்டு பேர் என்பது தெரியவந்துள்ளதாகவும், மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் கூறிய ஆணையர், இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்போம் என்று கூறினார்.

இரண்டு கார்களைப் பிடித்துள்ளோம். அதில் ஒன்றுதான் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் என்றும், அது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். webdunia.com

 

கடத்தல்காரர்களிடம் இருந்து ரூ.1 கோடி மீட்பு

மாணவன் கீர்த்திவாசனை கடத்திய கடத்தல்காரர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

Nakkheeran.in

 

 

சென்னையில் கடத்தப்பட்ட மாணவன் கீர்த்திவாசன் நேற்று வீடு திரும்பினார். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இரண்டு பேர் பிடிபட்டனர்.

அவர்கள் இருவரும் கீர்த்திவாசன் உறவினர்கள் என தெரியவந்தது. விஜய், பிரவு என்ற இருவரும் பிஇ படித்தவர்கள். அதில் ஒருவர் லண்டனிலும், மற்றொருவர் சிங்கப்பூரிலும் எம்பிஏ படித்துள்ளார்கள்.


கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து ஒரு கோடி ரூபாயை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.