லண்டன், கிளாஸ்கோ, நியூயோர்க்கை விடவும் காபூல் சிறுவர்களுக்குப் பாதுகாப்பான நகரம் நேட்டோ அதிகாரி கூறுகிறார்

23/11/2010 13:15

 

காபூல்: மேற்குலக நாடுகளின் பல நகரங்களை விட ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சிறுவர்களுக்குப் பாதுகாப்பானதென நேட்டோ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.லண்டன், கிளாஸ்கோ மற்றும் நியூயோர்க் போன்ற நகரங்களை விட காபூலில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கலாமென நேட்டோ அதிகாரியான மார்க் செட்வில் கூறியுள்ளார்.

"கிராமங்களின் நகரமென காபூலை வர்ணித்துள்ள இவர், மோதல் அபாயங்களுக்கு மத்தியிலும் ஏனைய மேற்குலக நகரங்களை விட காபூல் இளவயதினருக்கு சிறப்பானதாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

பி.பி.சி.யின் சிறுவர்களுக்கான செய்திச் சேவையொன்றுக்கே செட்வில் இக் கருத்தைத் தெரிவித்துள்ள அதேவேளை, காபூலிலுள்ள சில சிறுவர்கள் தமது அச்சம் குறித்து இச் செய்திச் சேவைக்கு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, செட்வில்லின் கருத்து தவறானதும் தவறாக வழிநடத்தக் கூடியதுமென "சேவ் த சில்ட்ரன்' என்னும் சிறுவர் அமைப்பு விமர்சித்துள்ளது.

ஆனால், இது குறித்து மேலும் கருத்துக் கூறியுள்ள செட்வில்;

லண்டன், நியூயோர்க், கிளாஸ்கோ மற்றும் ஏனைய பெரிய நகரங்களில் இருப்பதை விட காபூலில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்கலாம். இது குடும்ப மயப்படுத்தப்பட்ட ஒரு கீழைத்தேச சமூகம். இதனால், காபூலும் ஒரு கிராமங்களின் நகரத்தைப் போலவே தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்"சேவ் த சில்ட்ரன்' அமைப்பின் நிறைவேற்று அதிகாரி இது குறித்துத் தெரிவிக்கையில்;

மேற்குலக நகரங்களில் வாழும் சிறுவர்களை காபூலுடன் ஒப்பிட்டமை தவறானது. உலகின் மிக மோசமான இடமாக ஆப்கானிஸ்தான் இருக்கிறது.நான்கில் ஒரு சிறுவர் தமது 5 வயதை அடையும் முன்பே இறக்கும் அபாயம் இங்கு நிலவுகிறது. ஆப்கானிலுள்ள சிறுவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையே நாம் கேட்க வேண்டும்.கடந்த வருடம் ஆயிரக் கணக்கான சிறுவர்கள் மோதல்களில் உயிரிழந்துள்ளனர். ஆப்கானில் சிறுவர்களின் வாழ்க்கை மிகவும் அபாயகரமானதாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.பி.பி.சி.