லத்திகா நியமனத்தை ரத்து செய்தது தீர்ப்பாயம்-டிஜிபி பதவிக்கு நடராஜைப் பரிசீலிக்க உத்தரவு

01/06/2011 09:07

R Natarajசென்னை: தமிழக டிஜிபியாக லத்திகா சரண் மீண்டும் நியமிக்கப்பட்டது செல்லாது என்று மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், டிஜிபி பதவிக்கு நடராஜைப் பரிசீலிக்குமாறும் அது உத்தரவிட்டுள்ளது.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 2010ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி லத்திகா சரண் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து லத்திகாவை விட சீனியரான அப்போதைய தீயணைப்புத் துறை டிஜிபி ஆர்.நடராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லத்திகா சரண் நியமனம் செல்லாது என்று அறிவித்தது. மேலும், உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதிய டிஜிபியைத் தேர்வு செய்யுமாறு அது உத்தரவிட்டது. இதற்குக் காலக்கெடுவும் விதிக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளைக் கொண்ட பணி மூப்புப் பட்டியலை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசிடம் அளித்தது.

அதில் நடராஜ் பெயர் முதலிலும், லத்திகா சரண் பெயர் 3வது இடத்திலும் இருந்தது. இருப்பினும் மீண்டும் லத்திகாவையே டிஜிபியாக நியமனம் செய்து நவம்பர் 27ம்தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தீர்ப்பாயத்தை அணுகினார் நடராஜ்.

அவர் தாக்கல் செய்த மனுவில்,

நீண்ட பணி அனுபவம், பல்வேறு துறைகளில் பணியாற்றியது உள்ளிட்ட விஷயங்களைப் பரிசீலித்து மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் டி.ஜி.பி.க்கள் அடங்கிய பட்டியலில் என்னை முதல் இடத்தில் வைத்திருந்தது.

டி.ஜி.பி.யாக நியமிக்கப்படுவதற்கு அனைத்துத் தகுதிகள் இருந்தும், என்னைத் தவிர்த்து, லத்திகா சரணையே தமிழக அரசு மறுநியமனம் செய்துள்ளது.

என்னைத் தவிர்த்து அவரை நியமித்ததற்கு தமிழக அரசு எந்தக் காரணத்தையும் குறிப்பிடவில்லை. இவ்வாறு தேர்வு செய்வதற்கு மாநில அரசுக்கு எந்த அடிப்படையும் இல்லை.

கள அனுபவத்திலும், சிறந்த சேவைக்கான பதக்கங்கள் பெற்றதிலும் நான் முன்னிலை வகிக்கிறேன்.

டி.ஜி.பி.யை மறுநியமனம் செய்யும் குழுவில் தலைமைச் செயலாளர் மாலதி இருந்துள்ளார். லத்திகாவை ஏற்கெனவே டி.ஜி.பி.யாக நியமித்து அப்போதைய உள்துறைச் செயலாளராக இருந்த மாலதிதான் உத்தரவிட்டார்.

இந்தக் குழுவிலும் அவரே இடம்பெற்றிருந்ததால், குழுவின் தேர்வு முறை ஒருதலைபட்சமானது என்று கருதுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரணை மறுநியமனம் செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

அனைத்துத் தகுதிகளும் உள்ள என்னை சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி.யாக நியமிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாய உறுப்பினர்கள், இளங்கோ, சடபதி ஆகியோர் நேற்று இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தனர்.

அதில்,

தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக லத்திகா சரணை நியமித்து தமிழக அரசு நவம்பர் 27-ம் தேதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. நியமனத்துக்கு ஆர்.நடராஜின் தகுதி, பணி மூப்பு ஆகியவற்றைப் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடராஜ் பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil.com