வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாறாதீர்: ரிசர்வ் வங்கி

02/12/2010 21:11

அதிக வட்டி தருவதாக கூறும், கவர்ச்சி விளம்பரங்களை நம்பி அங்கீகாரமற்ற நிதி நிறுவனங்களில், பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம்' என, பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

 


ரிசர்வ் வங்கியிடம் அங்கீகாரம் பெறாமலேயே, சில நிதிநிறுவனங்கள், ரிசர்வ் வங்கியிடம் அனுமதி பெற்றதாக கூறி, கவர்ச்சி விளம்பரங்களை வெளியிடுகின்றன. இதில் அதிக வட்டி தருவதாக, முதலீட்டு திட்டங்களுக்கு நிதி கோருகின்றன. இதை உண்மையென நம்பி, ஏராளமான பொதுமக்கள் முதலீடு செய்கின்றனர். இந்நிறுவனம் உண்மையானது தானா என்று சோதித்து பார்ப்பதில்லை. குறிப்பாக நடுத்தர மக்கள் தான் இதில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்து போகின்றனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளதாக கூறி, விளம்பரம்படுத்தும் அங்கீகாரமற்ற நிதி நிறுவனங்களில், அதிக வட்டி தருவதாக கூறப்படும் நிதி திட்டங்கள் பற்றி, மக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அங்கீகாரமற்ற நிதி நிறுவனங்களில் பண சுழற்சி திட்டங்கள் பற்றி ஏராளமான புகார்கள் வருகின்றன. இந்த புகார்களை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கிறோம்.


வங்கி சாராத நிதி நிறுவனங்கள் செயல்படுவதற்கு, ரிசர்வ் வங்கியிடம் முறைப்படி அனுமதி பெற்ற, 300 நிறுவனங்கள் பற்றிய பட்டியலை ரிசர்வ் வங்கி ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இடம்பெறாத நிறுவனங்கள், முதலீடுகளை பெற்றால் அது சட்டப்படி குற்றமாகும்.


இப்படிப்பட்ட நிறுவனங்கள் குறித்து, சட்ட அமலாக்க துறையினர் விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுபோன்ற மோசடி நிறுவனங்கள் குறித்து, ரிசர்வ் வங்கி அவ்வப்போது விளம்பரங்கள் மூலம் எச்சரித்து வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. Nakkheeran.in