வரதட்சணை கொடுமைக்கு பெண்கள் பலியானால் அதை கொலை வழக்காக மாற்ற வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

23/11/2010 13:38

வரதட்சணை கொடுமைக்கு பெண்கள் பலியானால், அதை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது.
 

 


வரதட்சணை கொடுமை காரணமாக, புதுமணப்பெண்கள் பலியாகும் சம்பவங்களில், இந்திய தண்டனை சட்டம் 304 பி பிரிவின் கீழ் குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற வரதட்சணை கொடுமை வழக்குகளில், குற்றவாளிகள் மீது, இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் கீழ் கொலை வழக்காக மாற்றி, மாவட்ட கோர்ட்டுகள் விசாரணை நடத்த வேண்டும் என்று, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருக்கிறது. அதன் விவரம் வருமாறு:


வரதட்சணை கொடுமைக்கு 6 மாத புதுப்பெண் ஒருவர் பலியான வழக்கில், அவருடைய கணவர் ராஜு என்கிற ரஜ்பீருக்கு மாவட்ட கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. பஞ்சாப் அரியானா ஐகோர்ட் அந்த தண்டனையை குறைத்து தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டு இருந்தது.


நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, கியான்சுதா மிஸ்ரா ஆகியோரை கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து, ஐகோர்ட்டு தீர்ப்பை ரத்து செய்தது. இந்த வழக்கில் ராஜு என்கிற ரஜ்பீர், வரதட்சணை பாக்கிக்காக அவருடைய மனைவியின் தலையை பிடித்து மாறி மாறி சுவற்றில் அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து இருக்கிறார்.


அத்துடன் இதுபோன்ற வரதட்சணை கொடுமைக்காக பெண்கள் பலியாகும் வழக்குகளை கொலை வழக்குகளாக மாற்றி கீழ் கோர்ட்டுகள் விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில ஐகோர்ட்டுகளுக்கும் அனுப்பி, அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கோர்ட்டுகளுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என்றும், நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர்.

nakkheeran.in