வறுமை ஒழிப்புக்கு உதவும் செல்போன், இணையதளம்: ஐ.நா. தகவல்

17/10/2010 16:51

செல்போன், இணையதளம் போன்ற நவீன தொலைத் தகவல் தொடர்பு சேவைகள் வறுமை ஒழிப்பில் முக்கிய பங்காற்ற முடியும் என்று ஐ.நா. சபை மேற்கொண்ட ஆய்வில் தெர்யவந்துள்ளது.

குறிப்பாக வளரும் நாடுகளில் நவீன தகவல் தொடர்பு சாதனங்களின் பங்களிப்பு வறுமை ஒழிப்பில் மிக முக்கிய இடம்பெறும் என்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தகம், மேம்பாடு குறித்த ஐ.நா. சபையின் பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செல்போன், இணையதளம் போன்ற சாதனங்களால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, வருமானம் ஈட்டுவதற்கும் வழிவகுக்கிறது.

நவீன தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்துவதற்கு ஏற்ப அரசின் கொள்கைகள் இருக்குமாயின் அதன் பலன் ஏழை மக்களை சென்றடையும்.இந்த விடயத்தில் அரசு மிக முக்கிய பங்காற்ற முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏழை மக்களுக்கு பெரும்பாலும் தகவல்கள் மிகவும் காலதாமதமாகக் கிடைக்கின்றன. நவீன உபகரணங்கள் மூலம் அவர்கள் தகவல்களைப் பெறும்போது அதற்கேற்ப தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள முடியும்.

எங்கெங்கு வேலை வாய்ப்புகள் உள்ளன என்பது போன்ற தகவல்களை நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் பெற வழியேற்படுகிறது. இதேபோல விவசாயிகள் தங்களது விளை பொருளுக்கு எந்தெந்த சந்தையில் அதிக விலை கிடைக்கும் என்பதையும் அறிந்து கொள்ள அவை உதவுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Webdunia