வளர்ச்சி திட்டங்கள் மக்களைச் சென்றடையவில்லை: மணிசங்கர் அய்யர்

14/09/2010 14:59

"ஐ.நா. சபையின்  நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள்" என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது அவர் அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் மேலும் கூறியதாவது:-

பங்குச் சந்தை ஆரோக்கியமாக இருக்க அரசு எல்லாவிதமான ஆதரவையும் அளித்து வருகிறது. பங்குச் சந்தை செழிப்பாக இருந்தால் மக்களும் செழிப்பாக இருப்பார்கள் என்று இந்த அரசு கருதுகிறது. பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இடைவெளியைக் குறைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆண்டுக்கு 100 நாள்கள் வேலை வாய்ப்பு அளிக்கும் தேசிய வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் எந்த மாநிலத்திலும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் மட்டுமே இந்தத் திட்டத்தால் 36 சதவீதமே பயன்கிட்டியுள்ளது.

வறுமையின் பிடியில் சிக்கியுள்ள பல மாநிலங்களில் இந்தத் திட்டம் மிக மோசமாகவே அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தில் 14 சதவீதமும், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் 8 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான அளவிலேயே பயன்கிட்டியுள்ளது. ஓரிசா, உத்ரகண்டில் இன்னும் மோசம். இவற்றில் பெரும்பாலான மாநிலங்கள் மவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள். எனவே நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகளை அடைய வேண்டுமானால் தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைப் போன்ற முக்கிய திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும். இப்போது உள்ள நிலை தொடருமானால், இந்தியாவில் நூற்றாண்டு வளர்ச்சி இலக்கை அடையமுடியாது.

பங்குச் சந்தைக்கு அரசு முக்கியத்துவம் கொடுப்பதை கடுமையாகக் குறைகூறிய மணிசங்கர், கறுப்புப் பணத்தை முதலீடு செய்ய பங்குச் சந்தை ஒரு வடிகாலாக உள்ளது. இந்திய பங்குச் சந்தையில் 44 சதவீத முதலீடு மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்தது என்றார் அவர். நிலத்தை அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவ முறைக்குப் பதிலாக இப்போது பங்குச் சந்தையை அடிப்படையாகக் கொண்ட பிரபுத்துவ முறை உள்ளது என்றும் அவர் கூறினார்.

உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அரசின் சாதனையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது சீனாவுக்கு சவால் விடுக்கும் அளவில் இருக்கலாம். ஆனால், ஏழை, நடுத்தர மக்களுக்கு எந்த பயனும் இல்லை. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியால் இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானோரின் வருவாய் சிறிய அளவிலேயே உயர வாய்ப்புள்ளது. வருவாய் மற்றும் சொத்து வளர்ச்சி விகிதம் மிகவும் ஒழுங்கற்ற நிலையில் உள்ளது. பணக்காரர்களின் அரசியல் ஆதிக்கம் மிகவும் தவிர்க்க முடியாததாக இருப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. வேறு வகையில் சொல்லப் போனால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாக்கப்படுவார்கள். ஆரம்பக் கல்விக்கு அரசு முக்கியத்துவம் தரவில்லை. குறிப்பாக அனைவருக்கும் கல்வி போன்ற திட்டங்கள் மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. ஊரக வளர்ச்சியில் பஞ்சாயத்து நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 27 சதவீதம் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை 37 சதவீதம் என்றார் அவர்.

Tamil Koodal