வழுதூர் மின் நிலையம் விரைவில் செயல்பட நடவடிக்கை

16/08/2010 10:59

ராமநாதபுரம் அருகே வழுதூரில் செயல்பட்டு வந்த இரு இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையங்களும் கடந்த சில மாதங்களாக இயந்திரக் கோளாறு காரணமாக செயல்படாமல் இருப்பதாகவும்,​​ இதனால் அரசு நிதி ரூ.600 கோடி வரை வீணாகிக் கொண்டிருப்பதாகவும்,​​ கடந்த மாதம் 27-ம் தேதி தினமணி செய்தி வெளியிட்டிருந்தது.​ இதனைத் தொடர்ந்து நவீன ஜெனரேட்டர் கொண்டு வரப்பட்டு,​​ இரண்டில் ஒன்று செயல்பட தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வழுதூரில் இரு இயற்கை எரிவாயு சுழலி மின் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.​ முதலாவதாக துவங்கப்பட்ட மின் உற்பத்தி நிலையம் கடந்த 2000-ல் ரூ.400 கோடியில் 95.2 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் துவங்கப்பட்டது.​ இரண்டாவதாக கடந்த 2006-ல் துவங்கிய மின் நிலையம் ரூ.200 கோடியில் 92.3 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் துவக்கப்பட்டது. இயற்கை எரிவாயு மூலம் இந்தியாவில் அதிக மின் உற்பத்தி செய்த நிறுவனம் என,​​ மத்திய அரசு இந்நிறுவனத்துக்கு விருது வழங்கி கௌரவித்திருந்தது.

ஆனால் தற்போது இவ்விரு மின் உற்பத்தி நிலையங்களும் இயந்திரக் கோளாறு ​ காரணமாக கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்தன.​ இது குறித்து ​ செய்தி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து குற்றாலத்தில் உள்ள மின் நிலையத்திலிருந்த ஜெனரேட்டர் இயந்திரம் ஒன்று கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது.​ அதைப் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நவீன ஜெனரேட்டர் பொருத்தப்படுவதால் முதலாவது மின் உற்பத்தி நிலையம் ஓரிரு நாள்களில் மின் உற்பத்திப் பணிகளைத் துவங்கி விடும் என மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.