விக்கிலீக் வெளியிடும் ரகசியங்கள்: இந்தியா பற்றியும் பரபரப்பான தகவல்கள்

30/11/2010 14:50

அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை தொடர்ந்து, அந்த நாட்டின் தூதரக ரகசியங்களையும் விக்கிலீக் நிறுவனம் நேற்று வெளியிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்க தூதர்கள் மேற்கொண்ட உளவு வேலைகளை அது அம்பலப்படுத்தி இருக்கிறது.

 

ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள் குறித்து 4 லட்சம் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் என்ற புலனாய்வு இணையதள நிறுவனம் வெளியிட்டது.


அதனால், அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் அதிர்ச்சி அடைந்தது. அதன் தொடர்ச்சியாக, மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் அமெரிக்காவின் தூதரக ரகசியங்களை வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்தது.


முந்தையவற்றை விட 7 மடங்கு அதிகமாக இந்த புதிய ஆவணங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டது. எனவே, இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, அரேபியா, ரஷியா உட்பட பல்வேறு நாடுகளையும் அமெரிக்கா முன்கூட்டியே உஷார் படுத்தியது. அதே நேரத்தில், `தங்களுடைய இணையதளத்தை செயல்பட விடாமல் தடுக்கும் `சைபர்` குற்றங்கள் நடைபெறுவதாக` விக்கிலீக் நிறுவனமும் குற்றஞ்சாட்டியது.

எனினும், தங்களுடைய ஆவணங்களை எல்பைஸ், லீ மோண்டே, ஸ்பெய்கல், கார்டியன், நியுயார்க் டைம்ஸ் போன்ற பல்வேறு நாடுகளின் பத்திரிகைகள் மூலமாக வெளியிடப் போவதாக நேற்று முன்தினம் விக்கிலீக் அறிவித்தது.
 
அதன்படி, அமெரிக்காவில் உள்ள நியுயார்க் டைம்ஸ் மூலமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரகசிய ஆவணங்களை நேற்று வெளியிட்டது.
 

 


அதன் தொடர்ச்சியாக, லண்டனில் உள்ள கார்டியன் உள்ளிட்ட மற்ற பத்திரிகைகளும் இந்த ஆவணங்களை வெளியிட உள்ளன.


உலகம் முழுவதும் 170 நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் இருந்து வாஷிங்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவல்களை நியுயார்க் டைம்ஸ் பத்திரிகை மூலமாக விக்கி லீக் வெளியிட்டுள்ளது.


இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த பிரபலமான ஒருவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதை லண்டனில் உள்ள அமெரிக்க தூதரகம் கண்டு பிடித்து வாஷிங்டனுக்கு தகவல் அனுப்பி வைத்துள்ளது. அதுபோல, ரஷிய பிரதமர் புதினுக்கு வைக்கப்பட்ட `பட்டப் பெயர்' குறித்தும் வாஷிங்டனுக்கு மாஸ்கோவில் உள்ள தூதரகம் தகவல் அனுப்பியது.


புதினுக்கும், இத்தாலிய பிரதமர் சில்வினுக்கும் உள்ள உறவு குறித்தும் உளவு பார்க்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு அமெரிக்க தூதரகமும் உளவு வேலை பார்த்து வருவதாக அந்த ஆவணங்கள் சுட்டிக் காட்டுகின்றன.


கடந்த 2007-ம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களில் சீனாவில் குகூள் இணையதளத்தை சீன அரசு முடக்கிய விவகாரம், அணுசக்தி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா விலக்கி வைத்திருப்பது, அந்த நாட்டு அணுஉலைகளில் யுரேனியம் செறிவூட்டுவது குறித்தும் அவற்றை கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் பற்றியும் பின்னர் அந்த முயற்சி தோல்வியடைந்தது குறித்து பல்வேறு முக்கிய ரகசிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.


ஈரான் நாட்டின் அணுகுண்டு தயாரிப்பதாகவும் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் அமெரிக்காவை அரேபிய மன்னர் அப்துல்லாவும் வேறு சில வளைகுடா நாடுகளின் தலைவர்களும் வலியுறுத்திய தகவல்கள் உள்ளன.

தனது நட்பு நாடுகளையே அமெரிக்கா உளவு பார்த்த அதிர்ச்சிகரமான விபரங்கள் இடம் பெற்றுள்ளன. இது தவிர, ஐ.நா. பொதுச்செயலாளர் மற்றும் ஐ.நா. மூத்த அதிகாரிகளும் அமெரிக்க உளவு வளையத்துக்குள் உள்ளனர்.


ஆப்கானிஸ்தானில் ஊழலை வளர்த்தது, அல்கொய்தாவுக்கு கத்தார் உள்ளிட்ட அரேபிய நாடுகளில் இருந்து நிதி வருவது, ஆப்கானிஸ்தான் பிரச்சனை குறித்த விவாதத்தில் இந்தியாவை துருக்கி விலக்கி வைத்தது என பல தகவல்களும் திரட்டப்பட்டுள்ளன.


மொத்தம் உள்ள 2 லட்சத்து 50 ஆயிரம் ஆவணங்களில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வாஷிங்டனுக்கு சென்ற தகவல்களாக 3 ஆயிரத்து 38 ஆவணங்கள் இருக்கின்றன.

ஆனால், தொழில்நுட்ப காரணங்களால் அவை பற்றிய முழு விபரங்களையும் அறிய முடியவில்லை. அந்த தகவல்கள் வெளிவந்தால், இந்தியாவில் அமெரிக்கா மேற்கொண்ட உளவு வேலைகள் பற்றி தெரியவரும்.

nakkheeran.in