விக்கிலீக்ஸ் ஆவண வெளியீட்டின் பின்னணியில் அமெரிக்கா அஹமதி நிஜாத் குற்றச்சாட்டு

01/12/2010 17:21

விக்கிலீக்ஸ் இணையத் தளத்தின் இலட்சக்கணக்கான இரகசிய ஆவணங்களின் வெளியீட்டின் பின்னணியில் அமெரிக்காவே இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மஹ்மூட் அஹமதிநிஜாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெஹ்ரானில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விக்கிலீக்ஸின் வெளியீட்டை உளவியல் போரின் ஓர் அங்கமென வர்ணித்துள்ள அஹமதி நிஜாத் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டத்தின் பிரகாரம் உள்நோக்கத்துடனேயே இவ் ஆவணங்களை அமெரிக்கர்கள் வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு நிகழ்ச்சித்திட்டம் மீது தாக்குதலை நடத்துமாறு சவூதி அரேபிய மன்னர் அமெரிக்காவை வலியுறுத்தியிருந்தமை இவ் வெளியீட்டின் மூலம் அம்பலமாகியுள்ள நிலையிலேயே இவ்வாறு கூறியுள்ள அஹமதி நிஜாத்;

இவ் விவகாரம் ஈரானின் வெளியுறவுகள் மீது எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.அமெரிக்கர்களின் நோக்கத்தின் அடிப்படையிலேயே இவ் ஆவணங்கள் வெளியிடப்படுகின்றன.இது சட்டரீதியான பெறுமானங்கள் எதையும் கொண்டிராததுடன் அவர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தாக்கத்தை இது ஏற்படுத்தப்போவதில்லையெனக் கூறியுள்ளார்.

மேலும், இதனை ஒரு விளையாட்டு எனக் குறிப்பிட்டுள்ள அஹமதி நிஜாத் இதனை ஆராய்வதற்காக எவரும் நேரத்தை விரயமாக்கக் கூடாதென்பதே தனது நிலைப்பாடெனவும் கூறியுள்ளார்.த ஹிந்து