விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு அடைக்கலம் தர எக்குவடோர் முன்வந்தது

30/11/2010 15:02

 

 

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ச்சிற்கு எவ்வித முன்நிபந்தனையும் இன்றித் தம் நாட்டில் அடைக்கலம் தருவதற்கு இலத்தீன் அமெரிக்க நாடான எக்குவடோர் முன்வந்துள்ளது. இதனை அந்நாட்டின் பிரதி வெளியுறவுத்துறை அமைச்சர் கிண்ட்டோ லூக்கசு இணையத்தளம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

 

"அவரை நாம் இங்கு வந்து தங்குவதற்கு அழைக்க இருக்கிறோம். அவர் இங்கு வந்து தமது விக்கிலீக்ஸ் வலைத்தளத்தை எவ்வித இடையூறும் இன்றித் தொடர்ந்து நடத்தலாம்,” என அவர் தெரிவித்தார்.


விக்கிலீக்ஸ் இணையத்தளம் நேற்றுத் திங்கட்கிழமை அன்று அமெரிக்க அரசாங்க தூதரக அதிகாரிகள் அனுப்பிய இரண்டரை லட்சம் இரகசிய செய்திகளை சேகரித்து அவற்றில் 220 ஐ வெளியிட்டுள்ளது. மொத்தம் இரண்டரை லட்சம் ரகசிய செய்திகளும், ‘கார்டியன்’, ‘நியூயார்க் டைம்ஸ்’ உள்ளிட்ட ஐந்து ஊடக குழுமங்களுக்கு அது கொடுத்துள்ளது. இது போன்ற தகவல்கள் உலக அரசுகளின் உறவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


நேற்றைய கசிவின் பின்னர், இந்தக் கசிவுகள் எந்த நாட்டினதும் உள்நாட்டு சட்டங்களைப் பாதித்துள்ளனவா என்பதை ஆத்திரேலியக் காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். அசான்ச் ஒரு ஆத்திரேலியர் ஆவார்.


அசான்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பன்னாட்டு பிடியாணையை அண்மையில் சுவீடன் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஆனால் இக்குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். விக்கிக்கசிவுகளினால் பாதிக்கப்பட்டோரால் புனையப்பட்ட வழக்கு இது என அவர் கூறியுள்ளார்.


அசான்ச் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய கசிவுகளை வெளியிட முன்னர் ஜோர்தானில் காணொளி மூலம் உரையாற்றியிருந்தார். ரகசிய செய்திக் கசிவு தொடர்பாக பேசும் போது, அமெரிக்க இராணுவத்தில் இருக்கும் ஒரு சிலர் தகவல்களை வெளியிட விரும்புவதாக கூறினார்.


எக்குவடோரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்ட 1,621 இரகசியத் தகவல்கள் தம்மிடம் இருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் அவற்றை இன்னும் வெளியிடவில்லை. ta.wikinews.org