விபச்சாரத்திற்குச் சட்ட அனுமதி சரியா? இந்நேரம் கட்டுரை

14/12/2011 22:36

 

மும்பை காமாத்திப்புரா சிவப்பு விளக்குப் பகுதிஇந்தியாவின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று மும்பை. தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து அதிக பாதுகாப்பு கவசத்தில் 24 மணி நேரமும் இருக்கும் நகரமும் கூட!

மற்ற நாடுகளின் தொழில் நகரங்கள் இருக்கும் அளவுக்குப் பளபளப்பாக இல்லாவிட்டாலும், உலகில் மற்ற நகரங்களை எதிர்த்து போட்டி போட்டுக் கொண்டு வளரும் தெற்காசிய நகரங்களில் மும்பையும் ஒன்று. இந்தியாவின் பங்குச் சந்தை உட்பட பல தொழில் ரீதியான, அரசு மற்றும் தனியார் மையங்களும் மும்பையிலேயே உள்ளது. நாளுக்கு நாள் அங்கு தொழிலாளிகளாகவும், முதலாளிகளாகவும் செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம்.

உலக நாடுகளின் நகரங்களுடன் தொழில்வளர்ச்சியில் போட்டியிட்டு முன்னேறும் நகரம் என்ற மதிப்பிற்கிடையே, "மஹாராஸ்ட்ரா மராட்டியருக்கே!" என்ற ஒரு பிரிவினைவாத அச்சுறுத்தல் குரலும் அடிக்கடி இங்கு எழுவது வழக்கம்! இருப்பினும் மக்களின் மும்பை பற்றிய மோகம் சற்றும் குறையவே இல்லை என்றே சொல்லலாம். அதே நேரத்தில் இந்தியாவிலேயே விபச்சாரத்தைச் சட்ட ரீதியாக அனுமதித்துள்ள மாநிலம் மஹாராஸ்ட்ரா தான்! அதனால் மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதியும் மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைச் சுட்டியாகவேண்டும்!.

மும்பைக்குப் பல்வேறு சிறப்பம்சம்கள் இருப்பினும் விபச்சாரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சட்ட அனுமதி இந்தியாவுக்கே களங்கத்தை ஏற்படுத்தும் கறுப்பு புள்ளி என்பதில் மாற்று கருத்தில்லை. தொழிலாளிகள், முதலாளிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், அரசியல்வாதிகள் என பல தரப்பிலான மக்களின் உடல் பசிக்குத் தீனிபோடும் மும்பையின் சட்டப்பூர்வ விபச்சாரவசதி(!), அங்குள்ள பெண்களுக்கு எவ்வகையிலெல்லாம் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது என்பதைத் தற்போது நடத்தப்பட்ட ஒரு ஆய்வு வெளி உலகிற்குக் கொண்டு வந்துள்ளது.

தவறான சட்டங்கள்ஹிந்துஸ்தான் டைம்ஸுடன் அக்சரா என்ற அமைப்பு சேர்ந்து மும்பையில் வாழும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதில் 95 சதவீத பெண்கள் ஏதாவது ஒருவகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்வர்களாகவே இருந்தது தெரியவந்துள்ளது. தினசரி தெருக்களில் இது போன்ற ஈனச் செயல்கள் மும்பை நகரம் முழுவதும் அதிகரித்துள்ளது என்பதை இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்வர்களில் மிகக்குறைந்த பெண்களே காவல் நிலையம் மற்றும் அரசின் மற்ற உதவிகளை நாடுவதாகவும் அந்த அறிக்கை அதிர்ச்சி தரும் செய்தியினைத் தெரிவிக்கிறது. அப்படி காவல் நிலையம் செல்பவர்களைக்கூட காவல்துறையினர் இழிவாக நடத்துவதாக மற்றொரு அதிர்ச்சியையும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

இது சம்மந்தமான ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தெரிறிவிக்கும் போது, "முடிவு சதவிகித அடிப்படையில் சற்று அதிகமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் இந்த அளவுக்கு அதிகமாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது" என்று தெரிவித்துள்ளனர்.

"வினை விதைத்தவன் வினையறுப்பான்; தினை விதைத்தவன் தினையறுப்பான்" என்பதற்கு ஏற்ப, முன்னேறிய நகரம் மும்பை, தான் விதைத்த வினைக்குத் தற்போது பெரும் வினையையே அறுவடை செய்ய ஆரம்பித்துள்ளதையே இந்த ஆய்வறிக்கை வெளிப்படுத்துகிறது. கிட்டத்தட்ட, நாட்டில் எல்லா வரம்புகளையும் மீறிய ஒரு நகரமாக இன்று மும்பை மாறி விட்டது.

இதற்கான காரணம் என்ன?

அரசாங்கமே ஒரு குறிப்பிட்ட பகுதியில் பாலியல் தொழிலாளர்களை அனுமதித்து பாலியல் தொழில்(!) நடத்த அனுமதித்தது. அதன் விளைவாக அது படிப்படியாகப் பரவி இன்று குடும்பப் பெண்களின் வாழ்க்கையிலும் விளையாடத் துவங்கிவிட்டது.

மும்பை சிவப்பு விளக்குப் பகுதிஅது மட்டுமில்லாமல் பல்வேறு விடுதிகளில் நடத்தப்படும் பார் மற்றும் கலாச்சார நடனம் என்ற பெயரில் நடைபெறும் குடி மற்றும் கூத்து மற்றும் பெண்களைப் போகப் பொருளாக பயன்படுத்திய சில மலிவான வியாபாரிகளின் யுக்தி போன்றவை இன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளையும் தாக்கத் துவங்கிவிட்டது. அதோடு மட்டுமல்லாமல் இந்தக் கலாச்சாரம் இந்தியாவின் மற்ற நகரங்களுக்கும் காட்டுத் தீயைப் போல் பரவிவருகிறது கவலையளிக்கிறது.

இன்று மும்பை, "பெண்கள் வாழ பாதுகாப்பில்லாத நகரம்" என்ற சிறப்பை(!)யும் பெற்றுள்ளது! இந்நிலை தொடர்ந்தால் நாளை கொல்கத்தா?, சென்னை? பெங்களுரு? அஹமதாபாத்? ...... ஒட்டு மொத்ததில் இந்தியா?.

சமூக ஆர்வலர்களும், பெண் உரிமை அமைப்புகளும் இதை ஒரு செய்தியாக மட்டும் காணாமல், மிகப்பெரிய சமூக சீரழிவிற்கான நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லும் முக்கிய காரணியாக எடுத்துக் கொண்டு, நல்லதொரு சமூக மாற்றம் ஏற்படுவதற்காக "சட்டரீதியான விபச்சார அனுமதிக்கு" எதிராக போராடத் துவங்கினால், குடும்பப் பெண்களின் வாழ்கைக்கு சிறு பாதுகாப்பையாவது உறுதிபடுத்திக் கொள்ள இயலும்.

- அபூ அஸ்ஃபா 

inneram.com https://www.inneram.com/opinion/readers-mail/mumbai-worst-for-women-1351.html