விரைவில் பிரதமர் அலுவலக இணையதளத்தில் மத்திய அமைச்சர்கள் சொத்து விவரம்

15/11/2010 20:51

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களை பொதுமக்கள் இன்னும் இரண்டு நாளில் பிரதமர் அலுவலக இணையதளத்தில் காணலாம் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தகவல் அறியும் சட்டத்தை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் மூலம் மக்கள் பல்வேறு தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

இதன்படி மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் மத்திய அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் எழுதிய கடித்தத்தில் கூறியிருப்பதாவது,

ஆளும் அரசு தனது ஆட்சி நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. அதன்படி மத்திய அமைச்சர்கள் தங்கள் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்களை பொது மக்கள் அறியும் வகையில் இணையதளத்தில் வெளியிட பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சர்கள் நடத்தை விதிகளின்படி அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடும் அதிகாரம் பிரதமருக்கு உண்டு என்று அதில் கூறப்பட்டிருந்தது.

தற்போது அமைச்சர்கள் அனைவரும் தங்களது வரவு செலவு கணக்குகளை சமர்பிக்குமாறு அவர்களுக்கு நினைவூட்டல் கடிதத்தை சந்திரசேகர் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர்களின் சொத்து விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட பிரதமர் முடிவு செய்துள்ளார் என்றும், இன்னும் 2 தினங்களில் இந்த தகவல்கள் பிரதமர் அலுவலக இணையதள முகவரியில் இருக்கும் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

oneindia.com