வெள்ள நிவாரணம் மறுப்பு: வி.ஏ.ஓ.,வுக்கு அபராதம்

29/10/2010 21:10

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2008ம் ஆண்டு சென்னையில் வெள்ள நிவாரண பணமும் 10 கிலோ அரிசியும் வழங்கப்பட்டது. வெள்ள நிவாரண பணம் மற்றும் அரிசி வாங்குவதற்காக ஏராளமானோர் சென்றனர். அப்போது முத்து அப்புகுட்டி என்பவருக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படவில்லை.
 

 


இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் அவர் புகார் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது, 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம், எங்கள் பகுதியில் வெள்ள நிவாரணமாக ரூ.2 ஆயிரம் ரொக்கம், 10 கிலோ அரிசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. லட்சுமி பள்ளியில் அதை வாங்குவற்கான நானும் கியூவில் நின்றேன். நிவாரண தொகை வழங்குவதற்கு கிராம நிர்வாக அதிகாரி மணி நியமிக்கப்பட்டு இருந்தார்.
 
வெள்ள நிவாரண பணம் வழங்கப்பட்டது. ஆனால் 10 கிலோ அரிசி தரவில்லை. அது பற்றி கிராம அதிகாரிகளிடம் கேட்டபோது, இங்கு பணம் வாங்கிய அனைவரும் எதுவும் சொல்லாமல் போகிறார்கள், நீயும் வாயை மூடிக்கொண்டு போ என்றார். அந்த ரேஷன் அரிசியை பன்றி கூட தின்காது என்று ஏளனமாக கூறினார்.
 
எனவே, என்னையும் அரசு வழங்கிய அரிசியையும் கேவலமாக பேசியதால் மனவேதனை அடைந்தேன். எனவே சம்பந்தப்பட்ட கிராம அதிகாரிக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.


விசாரணையின் போது இதை கிராம அதிகாரி மணி மறுத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் செல்வகுமார், பரமேஸ்வரன் ஆகியோர் 10 கிலோ அரிசி வழங்காத கிராம அதிகாரி மணி, அவர் மீது புகார் கொடுத்த முத்து அப்புகுட்டிக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு தொகையாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார்.

 

nakkheeran.com