ஸ்டேடியம் குண்டு வழக்கில் மதானியின் தொடர்பு நிரூபணம் இல்லை: பிடாரி!

26/08/2010 13:58

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்புடன் மதானிக்கு தொடர்பு உண்டு என்று கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா கூறியதற்கு மாற்றமாக இந்த குண்டு வெடிப்புக்கும் மதானிக்கும் இடையிலான தொடர்பு நிரூபணம் ஆகவில்லை என்று பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் பிடாரி கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சரின் அறிக்கையை நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் ஸ்டேடியம் வழக்கில் மதானியின் தொடர்பு இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை என்று பெங்களூரு காவல்துறை ஆணையர் சங்கர் பிடாரி புதன் கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

2008
ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் மதானி கர்நாடக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடைபெற்ற விசாரணையின் போது, கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்ற சமயம் சின்னசாமி ஸ்டேடியத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புக்கும் தமக்கும் தொடர்பு இருப்பதாக மதானி கூறியதாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா செவ்வாய்க் கிழமையன்று கூறியிருந்தார்.

கர்நாடக உள்துறை அமைச்சரின் கூற்றுக்கு மாற்றமாக பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது