ஸ்பெக்ட்ரம் விவகாரம்: ரத்தன் டாடா புகார்

09/12/2010 14:20

 

 

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த விதிமுறையையும் மீற வில்லை என்று தொலை தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசா பல தடவை விளக்கம் அளித்தும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதை ஏற்காமல் பாராளுமன்றத்தை முடக்கின. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மையை வெளியில் கொண்டு வர கூட்டுக்குழு விசாரணை அவசியம் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக கூறின.
 
ஆனால் தற்போது ஸ்பெக்ட்ரம் எனும் அம்பு பாரதீய ஜனதா தலைவர்கள் நோக்கி திரும்பியுள்ளது. ஸ்பெக்ட்ரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று ஒரு பொதுநல வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தீர்ப்பளித்த நீதிபதிகள், பாரதீய ஜனதா ஆட்சிக் காலத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு பற்றியும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

இது ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்குள் பா.ஜ.க.வையும் இழுத்து விடப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் தான் அதிக முறைகேடுகள் நடந்ததாக கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். 
 
பாராளுமன்ற மேல் சபை எம்.பி. ராஜீவ்சந்திரசேகர், கடந்த வாரம் ஒரு தகவல் வெளியிட்டார். அதில் அவர், “தொலை தொடர்புத் துறையின் புதிய கொள்கையால் டாடா நிறுவனம் அதிக பலன் பெற்றுள்ளது. டாடா நிறுவனத்துக்கு சாதகமாக ஆ.ராசா நடந்து கொண்டார்” என்று கூறி இருந்தார்.
nakkheeran.in

 


ராஜீவ் சந்திரசேகருக்கு பதில் அளித்து தொழில் அதிபர் ரத்தன் டாடா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர்,
 
’’ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பிரதமரையும், ஆளும் கட்சியையும் நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்ற எண்ணம் உங்கள் கடிதத்தில் தெரிகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும்.
 
டாடா தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு ஆ.ராசாவோ அல்லது முந்தைய அந்த துறை அமைச்சர்களோ எந்த வகையிலும் எந்த சலுகையையும் காட்டவில்லை. அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான 2008-ம் ஆண்டு கொள்கை, விலையை ஒழுங்குப்படுத்தும் சக்தி வாய்ந்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்துள்ளது. 
 
தொலைத் தொடர்பு கொள்கை கள் அமல்படுத்தப்படுவது தாமதமாகி வந்தது. அதையும் 2008-ம் ஆண்டு ஸ்பெக்ட்ரம் கொள்கை உடைத்துள்ளது.
 
உண்மையைச் சொல்லப் போனால், தொலைத் தொடர்பு அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் கொள்கைகளில் பா.ஜ.க. ஆட்சித் தான் அதிக முறைகேடுகள் நடந்துள்ளது. இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
 
2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து தற்போது நடந்து வரும் விசாரணையை நான் ஆதரிக்கிறேன். அதே சமயத்தில் சி.பி.ஐ. நடத்தி வரும் வழக்கு விசாரணை வரம்பு 2001-ம் ஆண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று நம்புகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.