ஸ்பெக்ட்ரம்: காங்கிரஸை நெருக்கும் கூட்டணி கட்சிகள்!

09/12/2010 13:40

எதிர்கட்சிகள் கோருகிறபடி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தலாம் என்று காங்கிரஸ் கட்சியை திமுக, திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் வலியுறுத்துவதால் காங்கிரஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு காரணமாக மத்திய அரசுக்கு 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்காளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டது நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் சூறாவளியையே ஏற்படுத்திவிட்டது.

மத்திய தலைமை கணக்காளரின் அறிக்கையை வைத்துக்கொண்டு எதிர்கட்சிகள் ஆடிய ருத்ரதாண்டவத்தால் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா, தனது பதவியை ராஜினாமா செய்து வீட்டுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது மட்டுமின்றி, தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதிர்கட்சிகளிடம் திமுக வகையாக வறுபடும் நிலைக்கும் ஆளாகிவிட்டது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றால் 'டமால்' ஆகிப்போய் இருக்கும் திமுகவின் இமேஜே காப்பாற்ற அதன் தலைவர் கருணாநிதி, தினம் ஒரு கேள்வி பதில் அறிக்கையை வெளியிட்டுக்கொண்டிருக்க, மத்தியிலோ ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி, நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் காங்கிரஸை ஒரு வழி பண்ணிக்கொண்டிருக்கின்றன எதிர்கட்சிகள்.

குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து தினமும் நாடாளுமன்றம் கூடுவதும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், இதனால் அவையை நடத்த முடியாமல் ஒத்திவைப்பதுமாக இன்றுடன் தொடர்ந்து 18 நாளாக அதே காட்சிகள் அரங்கேறியுள்ளன.

இதுநாள் வரை நாடாளுமன்றம் முடங்கியதால் பல முக்கிய மசோதாக்கள் தாக்கலாகி நிறைவேற்றப்பட முடியாமல் போனது ஒருபுறமிருக்க, சுமார் 80 கோடிக்கும் அதிகமான ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் நாடாளுமன்ற முடக்கத்திற்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிப்பதற்காக கூட்டணி கட்சிகளின் கூட்டத்திற்கு மத்திய அரசு நேற்று அழைப்பு விடுத்தது.

இரவு 8 மணியளவில் நடைபெறுவதாக இருந்த அந்த கூட்டம், என்ன ஆனதோ திடீரென ரத்து செய்யப்பட்டது.

 

இந்நிலையில்தான் நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்படுவது, மாநிலத்தில் தங்கள் கட்சி மீதும் மக்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தும் என்ற எண்ணத்தில், காங்கிரசின் கூட்டணி கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக திமுக ஆகியவை, எதிர்கட்சிகள் கோருகிறபடி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொள்ளவேண்டியதுதானே என்று காங்கிரஸ் கட்சியை நெருக்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் இது குறித்து அக்கட்சிகள் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் தமது நிலையை திமுக கூறிவிட்டாலும், இதுபற்றி இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு, நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய எடுக்கும் முடிவுக்கு திமுக கட்டுப்படும் என தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தொடர்பாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி ஊடகங்களில் தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்துதான் திமுக தரப்பில் இன்று இப்படி ஒரு விளக்கம் அவசர அவசரமாக அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

ஆனால் நிலைமை இந்த அளவுக்கு சென்ற பிறகும்கூட நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடுவது தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து மவுனம் சாதிப்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

டெல்லியில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸின் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி, எதிர்கட்சிகள் தங்களது நிலையை மறு பரிசீலனை செய்தால் அதனை அரசு வரவேற்கும் என்றார்.

கூட்டணி கட்சிகளும் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தலாம் என்று அழுத்தம் கொடுக்கிறதே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, அதுபற்றி வாய் திறக்க மறுத்துவிட்டார் பிரணாப்!

ஆக மொத்தம் பிரச்சனையின் மூலவர் என்று குற்றம்சாற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ராசா சார்ந்துள்ள கட்சியே ஸ்பெக்ட்ரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தலாம் என்று கூறும்போது, காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் தயக்கம் ஏன்?

"அப்படியானால் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் காங்கிரஸ் தரப்பிலும் யாரோ பயனடைந்துள்ளார்கள்; எனவே நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடந்தால் அதுவும் வெளிப்பட்டுவிடும் என்ற அச்சம் மத்திய அரசுக்கு உள்ளதா? " என்ற கேள்வி டெல்லி ஊடகங்களிலும், அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் அலையடிக்க தொடங்கிவிட்டதால் அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ளது காங்கிரஸ்!

webdunia.com