ஹஜ் கமிட்டி மூலம் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு 3,979 பேர் ஹஜ் பயணம்

15/09/2010 16:49

ஹஜ் கமிட்டி மூலம் தமிழகத்தில் இருந்து இந்த ஆண்டு புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள மேலும் 262 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இது குறித்து ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர் கூறியதாவது,

இந்த ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர். எனவே, ஏற்கனவே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களை அதிகரிக்குமாறு மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்திற்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார்.

முதல்வரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு முதல் கட்டமாக 399 கூடுதல் இடங்களை மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகம் ஒதுக்கியது.

இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக 74 இடங்களும், 3ம் கட்டமாக 262 இடங்களும் ஒதுக்கியுள்ளது. இந்த கூடுதல் இடஒதுக்கீட்டால் தற்போது தமிழ்நாட்டில் இருந்து 3,979 பேர் ஹஜ் பயணம் செல்லவிருக்கின்றனர்.

கூடுதல் இடம் ஒதுக்க கடிதம் எழுதிய முதல்வருக்கும், இடம் ஒதுக்கிய மத்திய அமைச்சகத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஹஜ் யாத்திரிகர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகள் தொடர்பான கூட்டம் வரும் 16ம் தேதி மும்பையில் நடக்கிறது என்றார்.

Thats Tamil