ஹஜ் செய்வோர் கவனிக்க வேண்டியவை!

07/10/2010 09:53

இந்தியாவிலிருந்து ஹஜ் விமானங்கள் அக்டோபர் 20 முதல் புறப்படுகின்றன. மதீனாவிலும் ஜித்தாவிலும் ஹாஜிகள் வந்திறங்குகின்றனர். ஒரு ஹாஜி சுமார் 40 நாட்கள் இங்கு தங்குகிறார். 8 நாட்கள் மதீனாவிலும் 5 நாட்கள் அரஃபாவிலும் மினாவிலும் மீதி நாட்கள் மக்காவிலும் தங்கி இருப்பார். இந்த புனித பயணமும் தங்கும் நாட்களும் பாதுகாப்புடன் அமைய கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன.


1. இந்த வருட ஹஜ், குளிர் கால துவக்கத்தில் துவங்குகின்றது. இத்துவக்கம் சாதாரணமாக ஃபுளூ காய்ச்சல் துவங்கும் நாட்களாகும். இது சவுதி அரேபியாவில் துவங்கி விட்டதென்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பன்றிக்காய்ச்சலும் அதிகமாக பரவ வாய்ப்புகள் அதிகம். ஆதலால் ஹாஜிகள் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஆறு முதல் எட்டு மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக பழங்களும் பானங்களும் சூடான சூப் மற்றும் வைட்டமின் சி யைத் தரும் உணவுகளையும் உண்ண வேண்டும். இருமல் மற்றும் தும்மல் வரும் பொழுது கைக்குட்டை அல்லது டிஸ்ஸூ பேப்பர் மூலம் வாயையும் மூக்கையும் பொத்தவும். கைக்குட்டையை அடிக்கடி கழுவுதல் நலம். கை கொடுத்தல், கட்டித் தழுவுதல் மற்றும் முத்தம் கொடுத்தலை தவிர்க்கவும். மக்கள் நெருக்கமாக இருக்கும் இடங்களிலிருந்து விலகி இருக்கவும். வெளியே செல்லும் போது முகமூடி(மாஸ்க்) அணியுங்கள். காய்ச்சலோ தொண்டை வலியோ இருந்தால் அறைக்குள்ளேயே இருந்து மருந்து உட்கொள்ளுங்கள். அது நோய் அதிகமாவதையும் அடுத்தவருக்கு பரவுவதையும் தடுக்கும். காய்ச்சல் அதிகமானாலோ மூன்று நாட்களுக்கு பின்னரும் தொடர்ந்தாலோ உதட்டில் நிற வித்தியாசத்தை கண்டாலோ உடனடியாக மருத்துவரை காண்பிப்பது நலம்.

2. மனதளவில் மட்டுமின்றி உடலளவிலும் ஆரோக்கியம் இருப்பவர் ஹஜ் செய்வது நல்லது. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நோய்கள் எளிதாக பரவ வாய்ப்புகள் அதிகம். தவாஃப், சயீ கடமைகளை நிறைவேற்றும் போது அதிகமாக நடக்க வேண்டும். ஊரிலிருக்கும் நிறைய ஹாஜிகள் அதிகமாக நடப்பதில்லை. எனவே புறப்படுவதற்கு முன் அதிகமாக நடப்பதை பழக்கமாக்கிக் கொண்டு உடல்ரீதியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சவுதி அரேபியாவுக்கு வந்த பிறகு ஏதேனும் நோய் தென்பட்டால் நன்றாக ஓய்வெடுத்து அந்நோய் பூரணமாக குணமான பின்னரே வெளியே இறங்க வேண்டும். வெளியே செல்வதால் நோய் அதிகமாகிவிட்டால் ஹஜ்ஜின் முக்கிய விஷயங்களை செய்யமுடியாமல் 5 நாட்கள் எதுவும் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுவிடும். உடலில் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே ஹாஜிகள் உம்ராவும் ஹஜ்ஜூம் செய்ய வேண்டும்.

3. பணம், டிக்கெட், மருந்துகள் முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை கையில் கொண்டு போகும் பேக்கில் வைக்கவும். ஏனென்றால் லக்கேஜூகள் வௌ;வேறு வண்டிகளில் ஏற்றப்படுவதால் நம்முடைய அவசர தேவைக்கு அவை கிடைக்காமல் தாமதம் ஏற்படும்.

4. ஹாஜிகள் எப்பொழுதும் தங்களுடைய முஅல்லிம் நம்பரை நினைவில் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும். அடையாள அட்டையின்றி வெளியில் எங்கும் செல்லக் கூடாது.

5. புனித ஹரமில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தொழுவதற்காக தனித்தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது. எனவே தம்பதிகள் ஹஜ்ஜூக்கு செல்லும் போது ஹரமில் தொழுதுவிட்டு மீண்டும் சந்திக்க, ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை பார்த்து வைப்பது சிறந்தது. ஹரமிற்கு பல வாசல்களும் அவற்றிற்கு எண்களும் அதில் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளதால் அவற்றில் ஏதாவதொன்றை அடையாளமாக்கிக் கொள்ளலாம். வழி மாறி சென்றுவிட்டால் ஹரமிற்கு வெளியே முக்கிய இடங்களில் சேவை செய்து கொண்டிருக்கும் இந்தியன் ஹஜ்ஜூ மிஷன் பணியாளர்களிடம் உதவி கோரலாம். இந்தியா என எழுதப்பட்ட ஜாக்கெட்(சட்டை) அணிந்த அவர்கள் உங்களுடைய தங்குமிடத்திற்கு வழி சொல்வர்.

6. இந்த வருடம் ஹாஜிகள் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தான் புனித இடங்களில் தங்குகின்றனர். இம்மாதம் அதிகமாக குளிரக்கூடிய மாதங்களாகும். குளிரிலிருந்து தங்களை காத்துக் கொள்ள ஜாக்கெட், குளிர் தொப்பி மற்றும் கம்பளி ஆடைகளை பயன்படுத்த வேண்டியதுவரும். இரு புனித ஆலயங்களுடைய தரைப்பகுதியில் மார்பிள் பதிக்கப்பட்டுள்ளதால் ஜில்லென்றிருக்கும். எனவே தொழுகை, தவாஃப் மற்றும் உம்ராவிற்கு செல்லும் போது காலில் சாக்ஸ் அணிந்து செல்வது உத்தமம்.

7. ஹாஜிகள் தங்களுடைய பணம் முழுவதையும் தாங்களே வைத்திருக்காமல் தங்களுடைய முஅல்லிம் வசம் கொடுத்து விட்டு தேவைப்படுபவற்றை மட்டும் தேவைப்படும் நேரங்களில் வாங்கிக் கொள்ளலாம். தனியாக செல்லும் நேரங்களில் தெரியாத டாக்ஸிகளில் ஏற வேண்டாம். திருட்டு டாக்ஸிகளில் பயணம் செய்யும் ஹாஜிகளை வெகு தொலைவிற்கு கொண்டு சென்று கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன.

8. சாலைகளின் போக்குவரத்து முற்றிலும் வித்தியாசமானது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது சாலையை கடக்கும் போது இடதுபக்கத்திலிருந்து வாகனங்கள் வருகின்றனவா என்பதை கவனித்து செல்லவேண்டும். இந்தியாவில் நாம் வலதுபக்கத்தை கவனிக்கின்றோம்.

9. இந்தியன் ஹஜ் மிஷன் மக்காவில் கிஸ்லா பார்க்கின் எதிர்புறத்திலிருக்கும் ஜர்வல் கிஸ்லாவில் செயல்பட்டு வருகின்றது. 11 கிளை அலுவலகங்களும் இருக்கின்றன. தங்களின் கிளை எது என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தியன் ஹஜ் மிஷன், கிளை அலுவலகங்கள், போலீஸ் ஸ்டேசன், மருத்துவமனைகள் போன்ற முக்கிய இடங்களின் தொலைபேசி எண்களை எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டும்.

10. சுத்தமான உணவுகளை மட்டுமே ஹஜ் வேளையில் விற்க வேண்டுமென்ற சவுதி அரசின் கட்டளையின் படி அதை உறுதிசெய்ய அதிகாரிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் திடீர் ஆய்வுகளை நடத்தி வந்தாலும் திறந்தவெளிகளில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யும் கடைகளிலிருந்து உணவுகளை வாங்குவது கூடாது. சவுதியில் தங்கி இருக்கும் நாட்களில் போஷாக்குள்ள பழங்கள், பேக்கிங் செய்யப்பட்ட ரொட்டிகள் ஆகியவற்றை உண்டு ஆரோக்கியம் காக்க வேண்டும். குறிப்பாக மினாவில் தங்கும் போது இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

11. முக்கிய ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம். அவற்றை ஊரிலேயே நம்பத்தகுந்தவரிடம் ஒப்படைத்து விட்டு பயணம் புறப்படுவது நல்லது. ஆவணங்கள் தொலைந்து விட்டால் இந்தியாவில் அவற்றின் நகலை பெறுவது சிரமமாக விஷயமாகும்.

12. மக்காவில் குறிப்பாக மினாவில் ஹாஜிகள் திறந்த வெளியில் துப்புவதோ கழிவுகளை வீசுவதோ கூடாது. குப்பைகளை அதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

13. தங்களுக்கு சொந்தமில்லாத எந்த பொருட்களையும் எங்கு கண்டாலும் ஹாஜிகள் எடுப்பது கூடாது. புனித இடங்களில் பல பகுதிகளிலும் சிசிடிவி காமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக போலீஸ் அனைவரையும் கண்காணித்துக் கொண்டிருக்கும். பிறரது பொருட்களை எடுத்து பிடிபட்டால் திருட்டுக் குற்றத்தில் சிறை செல்ல வேண்டியது வரும்.

14. ஏதாவது காரணத்தால் தங்களை போலீஸ் பிடித்து பேப்பரில் கையெழுத்து போடச் சொன்னால் அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அறியாமல் கையெழுத்து போட வேண்டாம்.

15. கடைகளில் சென்று மொட்டையடிப்பது சிறந்தது. ஏனெனில் ஆங்காங்கே கத்தியும் பிளேடும் கொண்டு சுற்றித்திரியும் நபர்களிடம் மொட்டையடித்தால் சுத்தமில்லாத உபகரணங்களால் தலையில் காயங்கள் ஏற்படுவதோடு நோய் தாக்கும் அபாயம் ஏற்படும்.

16. சாதாரணமாக நீங்கள் பயன்படுத்தும் மருந்துகளுடன் கூடிய ஒரு சிறிய முதலுதவிப் பெட்டியை எப்பொழுதும் கையில் வைத்திருப்பது நல்லது.

17. எவருக்கேனும் சுகவீனம் ஏற்படும் பொழுது உறவினர்கள் இல்லையெனில் உடனிருப்பவர்கள் அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்.

18. சவுதி அரேபியா ஒரு பாலைவன பூமி. ஆனால் அவற்றிலிருந்து வித்தியாசப்படும் அற்புதமான நகரம் மக்கா. லட்சக்கணக்கான மக்கள் சந்திக்கும் அந்த இடத்தில் அனைவருக்கும் இறைவன் தண்ணீரை தருகிறான். அந்த தண்ணீரை வீணாக்காமல் இருக்க வேண்டும்.

19. ஒவ்வொரு தொழுகையின் போதும் மக்கள் கூட்டம் ஹரமை நோக்கி வரும். எனவே வயதானவர்கள் தொழுகை நேரத்துக்கு சற்று முன்னதாகவே வந்து எலிவேட்டர்(சுழலும் மின்சார படிக்கட்டு) மூலமாக பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் எலிவேட்டரின் முன்பாக காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்படும்.

20. ஹாஜிகள் மதீனாவில் 8 நாட்கள் தங்குவர். மதீனாவிலிருந்து மக்காவிற்கு 10 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். வழியில் அடிக்கடி நிறுத்துவதற்கு டிரைவர் தயங்குவது வழக்கம். எனவே வழியில் பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்காமல் கழிவறைக்கு செல்வது முதல் உணவு பொருட்கள், தண்ணீர் ஆகியவற்றை முன்பே எடுத்து தயாராக இருக்க வேண்டும்.

21. மினாவில் அனைத்து கூடாரங்களும் ஒரே வடிவத்தில் இருப்பதால் ஹாஜிகள் தங்கள் கூடாரங்களிலிருந்து வழி தவறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. கூடாரத்தை கண்டுபிடிக்க முடியாது போனால் 'லாஸ்ட் பில்கிரிம் சென்டர்' (Lost pilgrim Center) என்ற காணாமல் போன ஹாஜிகளை கவனிக்கும் இடத்திற்கோ அல்லது இந்திய ஹஜ் மிஷன் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும். மினாவில் ஒவ்வொரு பகுதியிலும் கூடாரங்களில் எண்கள் எழுதப்பட்டிருக்கும். எனவே ஹாஜிகள் ஒவ்வொருவரும் தங்கள் கூடாரங்களின் எண்ணையும் அந்த பகுதியின் எண்களையும் அறிந்திருப்பது அவசியமாகும். வயது முதிர்ந்தவர்களும் நோயாளிகளும் தனியாக எக்காரணத்தைக் கொண்டும் ஜம்ராவில் கல்லெறிய செல்லக் கூடாது. அதுபோன்று வீல்சேருடனும் கையில் லக்கேஜூகளுடனும் செல்வது கூடாது. மக்கள் கூட்டத்தின் இடையில் அது நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் என்பதோடு போலீசார் லக்கேஜூகளை பறிமுதல் செய்து விடுவார்கள்.

22. மினா என்பது 30 லட்சம் ஹாஜிகள் 5 நாட்கள் சங்கமிக்கும் ஒரு பள்ளத்தாக்காகும். அதன் ஒவ்வொரு அடி நிலமும் விலைமதிக்க முடியாதவை. அங்கு கூடாரத்தில் தங்குவதற்கும் உறங்குவதற்கும் மிகக் குறைந்த இடமே கிடைக்கும். அதனால் வெளியிலிருந்து யாரேனும் வந்து தங்கினால் உடனடியாக அதை முஅல்லிமிடம் தெரிவிக்க வேண்டும்.

தங்களுடைய ஹஜ் பயணம் எந்தவித சிரமமுன்றி அமைய வேண்டும் என்பதற்காக இந்தியன் எம்பஸியிலிருந்து ஸயீத் அஹமது பாவா (கோன்ஸல் ஜெனரல், ஜித்தா), பி.எஸ்.முபாரக் - கோன்ஸல்(ஹஜ், தகவல் மற்றும் செய்தி (B.S.Mubarak - Consul (Haj, Press & Information) ஆகியோர் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிவித்துள்ளனர். இந்த விபரங்களை துண்டு பிரசுரங்கள் மூலமாக தமிழத்திலிருந்து ஹஜ் செல்வோரிடத்தில் விநியோகம் செய்வது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
 


 

நன்றி : உணர்வு
www.abu-noora.blogspot.com