ஹஜ் செல்லும் பயணிகளுக்கு பயிற்சி முகாம்

29/09/2010 15:36

தமிழக அரசின் உதவியுடன், ஹஜ் செல்லும் பயணிகளுக்கு புத்தறிவு பயிற்சி முகாம் சென்னையில் நேற்று நடந்தது. தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை சென்று வருகின்றனர். கடந்த ஆண்டு 3 ஆயிரத்து 213 பேர் ஹஜ் யாத்திரை சென்றனர். இந்த ஆண்டு மொத்தம் 4 ஆயிரத்து 748 பேர் யாத்திரை செல்கின்றனர். இது, கடந்த ஆண்டை விட ஆயிரத்து 535 அதிகம். தமிழக அரசு உதவியுடன் அதிக பயணிகள் செல்வது இதுவே முதல் முறை. இதற்காக 26 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, மத்திய அரசு உணவுக்காக 50 ஆயிரம் ரூபாய் தந்துள்ளது. பயணத்திற்காக 11 விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 

முதல் யாத்திரை அக்., 14ல் துவங்க உள்ளது. இந்த ஆண்டு ஹஜ் செல்லும் பயணிகள், எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த புத்தறிவு பயிற்சி முகாம், சென்னை சூளையில் உள்ள ஹஜ் ஹவுசில் நேற்று நடந்தது. விளையாட்டுத் துறை அமைச்சர் மொய்தீன்கான், தமிழக அரசு செயலர்கள் ராமநாதன், அலாவுதீன் மற்றும் தமிழ் மாநில ஹஜ் குழு தலைவர் அபுபக்கர் ஆகியோர் பயணத்தின் போது யாத்திரை செல்வோர் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு விதிகள், கட்டுப்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். பயிற்சியில் முதற்கட்டமாக ஹஜ் யாத்திரை செல்லும் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Dinamalar