ஹஜ் பெருநாள் நவம்பர் 18ஆம் தேதி - தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

15/11/2010 12:52

இந்த வருட ஹஜ் பெருநாள் தினத்தையும் வழக்கம் போல் காலண்டர் கணக்கில் முடிவு செய்து விட்டனர் தமிழக முஸ்லீம்கள். நோன்புப் பெருநாள் தினத்தை முடிவு செய்வதில் பிறையை கருத்தில் கொள்ள வேண்டும் என விளங்கி வைத்திருக்கும் நாம் ஹஜ் பெருநாளை முடிவு செய்வதில் ஏனோ கவனமாக இருப்பதில்லை, காலண்டரில் பிறை ஒன்று என்று இருந்தால் அதை அப்படியே கருத்தில் கொண்டு பெருநாளையும் கொண்டாடி வருகிறோம். ஆனால் அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் ஹஜ்ஜுடைய காலத்தை காட்டுவது சந்திரனே அதாவது பிறையே என தெளிவான வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

 

2-189. பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். 'அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

 

”நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ

எனவே பிறையைப் பார்த்து முடிவு செய்வதுதான் நபிவழி என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் கீழ்காணும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஹஜ் பெருநாள் அறிவிப்பு

 

கடந்த 7-11-2010 அன்று துல்காயிதா மாதம் 30 ஆம் இரவில் தமிழகத்தில் எந்த ஊரிலும் பிறை பார்க்கப்படவில்லை.

”மேக மூட்டமாக இருந்ததால் அம்மாதத்தை 30 நாட்களாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்” என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளைப்படி துல்ஹஜ் முதல் பிறை தமிழகத்தில் இன்று (9-11-2010) ஆரம்பமாகின்றது.

எனவே இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாள் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 18-11-2010 அன்று தமிழகத்தில் கொண்டாடப்படும்.

 

மக்களை நபிவழியை பின்பற்ற அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவலசை கிளை. சற்று குழப்பமாக இருந்தாலும், ஊரே ஹஜ் பெருநாளை 17 ஆம் தேதி கொண்டாடினாலும் அல்லாஹ்வையும் அவனது தூதருக்கும் கட்டுப்பட வேண்டும் என்பதால் குடும்பத்துடன் வரும் 18 ஆம் தேதி பெருநாள் கொண்டாடி குர்பானி கொடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.