ஹேமந்த் கர்கரேவுக்கு இந்துத்துவாக்கள் மிரட்டல்; திக்விஜய் சிங் கூறும் 'திக்-திக்' செய்தி!

15/12/2010 11:21

 

நாட்டில் எந்த  மூளையில் குண்டுவெடிப்பு நடந்தாலும், உடனே அதிகாரவர்க்கத்தின் பார்வையும், ஊடகங்களின் பார்வையும் நோக்குவது முஸ்லிம்களை மட்டுமே. இந்த மாற்றந்தாய் மனப்பான்மையை மாற்றி, நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கும் - காவிகளுக்கும் உள்ள கறைபடிந்த வரலாறை மாலேகான் உண்மைக் குற்றவாளிகள் கைது மூலம் மக்கள் முன் வைத்தார் மாவீரன் கர்கரே.

பின்னர் மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் கர்கரே சந்தேகத்திற்கு இடமளிக்கும்  வகையில் கொல்லப்பட்டார். அப்போதே ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட விதம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் அவர் உண்மையிலேயே தீவிரவாதிகளால்தான் கொல்லப்பட்டாரா அல்லது அவரது மரணத்துக்கு வேறு ஏதும் காரணமா என்று எனக்குத் தெரியவில்லை என்றும், இந்த விஷயத்தில் உண்மை மறைக்கப்படுவதாக நான் உணர்கிறேன் என்றும் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர்.அந்துலே சந்தேகம் எழுப்பியதும், அதற்கு  பாஜக உள்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததும், அவர் பதவி விலக நேர்ந்ததும் நினைவுகூறத்தக்கது.

இந்நிலையில் அந்துலேவை தொடர்ந்து குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ள கருத்து இந்துத்துவாக்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

''மும்பை ஏ.டி.எஸ்., தலைவர் ஹேமந்த் கர்கரேவிற்கு மும்பை தாக்குதல் நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் மிரட்டல் வந்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் சர்சைக்குரிய புதிய தகவலை தெரிவித்துள்ளார். மும்பை தாக்குதல் நடத்தப்பட்ட அன்று சுமார் மூன்றரை மணி நேரம் பேசியதாகவும், அவர் கொல்லப்பட்ட தகவல் தன்னை அதிர்ச்சி அடைய வைத்ததாகவும் திக்விஜய் தெரிவித்துள்ளார். இந்துத்துவ அமைப்புகளிடம்  இருந்து அவருக்கு மிரட்டல் போன்கள் வந்ததாகவும் கர்கரே குறிப்பிட்டதாக திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

திக்விஜய் சிங்கின் கூற்று, காங்கிரஸ் அரசை தர்மசங்கடத்தில் தள்ளும் ஊழல் பிரச்சினையை திசைதிருப்பும் நோக்கத்தில் சொல்லப்பட்டதாகும் என்று வழக்கம் போல தன் பங்குக்கு திசை திருப்புகிறது பா.ஜ.க.

எது எப்படியோ, கர்கரே போன்ற உண்மையான -நேர்மையான- துணிவான அதிகாரிகள் கொல்லப்படுவதும், அதையொட்டி எழுப்பப்படும் சந்தேகங்களுக்கு அரசு முக்கியத்துவம் தராததும் கவலைக்குரியதாகும். கர்கரே மரணத்திற்கு காரணமான கரங்கள் அடையாளம் காணப்படுவது அவசியமானதும், அவசரமானதுமாகும்.