ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு - அநியாயமாக சிறைவாசம் அனுபவித்த முஸ்லீம் இளைஞர்களுக்கு நஷ்டயீடு

08/12/2011 21:28

 

ஹைதராபாத் : 2007ல் நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் காவல்துறையில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்கள் பின்னர் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர்.

இது போன்று பல வழக்குகளில் குற்றவாளிகள் என கைது செய்யப்படுபவர்கள் பின் அப்பாவி என விடுதலை செய்யப்பட்டாலும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டதில்லை. முதன் முறையாக ஆந்திர அரசாங்கம் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க முன் வந்துள்ளது. இது இந்திய குற்றவியல் வரலாற்றில் ஒரு புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தேசிய சிறுபான்மையினர் குழுவின் பரிந்துரை படி தவறாக சிறையில் அடைக்கப்பட்ட 70 முஸ்லீம் இளைஞர்களில் 20 நபர்களூக்கு 3 இலட்சமும் மீதமுள்ள 50 நபர்களுக்கு 20,000 ரூபாயும் வழங்கப்படுவதாக மாநில அரசின் சிறுபான்மை நல குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே 18, 2007 அன்று நடந்த மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் 9 நபர்கள் இறந்தனர். காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் மேலும் 5 நபர்கள் இறந்தனர். குண்டு வெடிப்புக்கு காரணமாக பல முஸ்லீம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீஸ் காவலில் கொடுமைப்படுத்தப்படுவதாக தேசிய சிறுபான்மை கமிஷன் குற்றம் சாட்டியது. பின்பு அவர்களுக்கும் குண்டு வெடிப்புக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டனர். 

>பின்பு மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதாக வலது சாரி ஹிந்துத்வா குழுக்கள் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் நஷ்ட ஈடு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆந்திர முதல்வர் கிரண் ரெட்டி தவறுதலாக சிறையில் தங்கள் வாழ்வை கழித்த அத்துணை முஸ்லீம் இளைஞர்களிடமும் மன்னிப்பு கேட்பதாக கூறினார். நஷ்ட ஈடு வழங்குவதோடு அப்பணத்தை தவறு செய்த காவல்துறை அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேசிய சிறுபான்மை கமிஷன் கோரியிருந்தது. 

மேலும் சிறையில் தங்கள் வாழ்வை கழித்த அப்பாவிகளுக்கு அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசாங்க வேலை தரவேண்டும் என்றும் தேசிய சிறுபான்மை கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ஆந்திராவில் உள்ள மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லீமின் உள்ளிட்ட முஸ்லீம் குழுக்கள் நஷ்ட ஈடு தருமாறு சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

inneram.com