அசாமில் ராணுவம் குவிப்பு: வன்முறைக்கு இதுவரை 40 பேர் சாவு

26/07/2012 10:21

கோக்ரஜார் (அசாம்), ஜூலை 25: அசாமில் கடந்த சில நாள்களாக நீடித்து வரும் வன்முறை, கலவரத்தை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.

 

 

 இதனிடையே கலவரத்துக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யுமாறு மத்திய அரசு, மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் கூறினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

 

 கலவரத்துக்கு காரணமானவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் என்றாலும், அவர்களைக் கைது செய்யவும், வன்முறையில் அவர்களுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை மூலம் தெரியவந்தால் அவர்களை விடுவிக்குமாறும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 சர்வதேச எல்லைப் பகுதி சீல் வைக்கப்பட்ட நிலையில், வங்க தேசத்தில் இருந்து எந்த ஒரு அமைப்பும் சாதாரணமாக அசாமுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்திவிட முடியாது. வடகிழக்குப் பகுதிகளில் ரயில்களை மீண்டும் இயக்க 1000 துணை ராணுவப் படையினரும், 1000 ரயில்வே பாதுகாப்புப் படையினரும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

 மேலும் பாதுகாப்புப் பணிக்காக அதிக எண்ணிக்கையில் ராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர் என்றார்.

 

 போடோலாந்து சிறுபான்மை மாணவர் அமைப்பின் நிறுவனத் தலைவர் மொகிபுல் இஸ்லாம் மற்றும் அசாம் சிறுபான்மை மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் அப்துல் சித்திக் செயிக் ஆகியோரைக் கடந்த வியாழக்கிழமை இரவு ஒரு கும்பல் தாக்கியதால் படுகாயமடைந்த அவர்கள் இறந்தனர். இதற்குப் பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில் போடோ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கலவரமும், வன்முறையும் வெடித்தன.

 

 இதற்கிடையே, கலவரத்தால் இறந்தவர்கள் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. சிராங் மாவட்டம் பிஜ்னி பகுதியில் இருந்து 6 உடல்களும், கோக்ரஜார் பகுதியில் இருந்து 2 உடல்களும் புதன்கிழமை மீட்கப்பட்டன. இறந்த 40 பேரில், கோக்ரஜார் பகுதியைச் சேர்ந்த 26 பேர், சிராங் பகுதியைச் சேர்ந்த 14 பேர் அடங்குவர்.

 

 இந்தப் பகுதிகளில் கண்டதும் சுடும் உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. ஆனாலும், கோக்ரஜார் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு புதன்கிழமை காலை 6 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை தளர்த்தப்பட்டது. சிராங் மற்றும் துப்ரி மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

 முதல்வர் ஆலோசனை: அசாம் முதல்வர் தருண் கோகோய், முதன்மைச் செயலர், அரசு அதிகாரிகளின் கூட்டத்தைக் புதன்கிழமை கூட்டி, கலவரம் பாதித்த பகுதிகளில் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்தார். வன்முறைக்கு காரணம் அப்பகுதி மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருப்பதே ஆகும். எனவே, அந்த மக்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கவும், வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் அரசு முயற்சிகளை மேற்கொள்ளும், என்றார்.

 

 குழு அமைப்பு: வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிளை பார்வையிட்டு, ஆய்வு செய்ய சட்டப்பேரவை துணைத் தலைவர் பிமானந்த தாந்தி தலைமையில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.எல்.ஏக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு வியாழக்கிழமை ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள உள்ளது.

 

 2 லட்சம் பேர் பாதிப்பு

 

 வன்முறை வெறியாட்டத்தால் வீடுகளை இழந்த அப்பாவி மக்கள் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள 150 பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். 3 மாவட்டங்களில் 500 கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள் எரிக்கப்பட்டும், கடைகள் உள்ளிட்டவை அடித்து உடைக்கப்பட்டும் கிடப்பதால் அப்பகுதியே அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

 

 13,000 ராணுவத்தினர் குவிப்பு

 

 கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கோக்ரஜார் மற்றும் சிராங், துப்ரி, போங்கைகான் மாவட்டங்களில் 13,000 ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அமைதியை ஏற்படுத்த இவர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். ரோந்துப் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் எஸ். போகட் கூறினார்.

 

 ரயில்கள் இன்று இயங்கும்

 

 வடகிழக்குப் பகுதியில் 2-வது நாளாக ரயில்கள் புதன்கிழமை இயக்கப்படவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் 30,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களில் பலர் மாற்று வாகனங்கள் மூலம் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். 10,000 பேர் இன்னமும் ஆங்காங்கே ரயில் நிலையங்களில் தவித்து வருகின்றனர். துணை ராணுவப் படையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்புடன் வியாழக்கிழமை மதியம் 2.15 மணி அளவில் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வேத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

dinamani.com