அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியைத் தொடங்கியது ஈரான்

21/08/2010 20:28

தனது முதல் அணுஉலையில் எரிபொருள் நிரப்பும் பணியை ஈரான் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப் பணியில் ஈரான் மற்றும் ரஷிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 

ஈரானில் அணுஉலைகளை அமைக்கும் பணிக்கு ஐ.நா. மற்றும் மேற்கு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அணுஉலைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள்கள் மூலமாக அந்த நாடு அணுஆயுதம் தயாரிக்கக்கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. ஈரானுக்கு எதிராக பலசுற்றுப் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் ஈரானில் முதன் முதலாக அமைக்கப்பட்ட புஷேர் அணுஉலையில் எரிபொருள்களை நிரப்பும் பணி இன்று தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரம் நடக்க இருக்கும் இந்தப் பணியில் ஈரானியர்களுடன் ரஷியப் பொறியாளர்களும் ஈடுபட்டிருக்கின்றனர்.

இது ஈரான் அணுசக்தித் திட்டத்தில் மிகப்பெரிய மைல்கல் எனவும் சர்வதேச அரங்கில் ஈரானுக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி எனவும் அந்நாட்டு எம்.பி. ஒருவர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்த அணுஉலையின் கட்டுமானப் பணிகளில் உதவிய ரஷியா, அணுஉலையின் பாதுகாப்புக்கும், ஆயுதத் தயாரிப்புக்கு எரிபொருள்கள் கடத்தப்படாமலிருப்பதைக் கண்காணிக்கவும் உலக நாடுகளுக்கு உறுதியளித்திருக்கிறது.