அபு கிரைப் சிறை வன்கொடுமைக்கு நஷ்டஈடு கொடுத்ததாக கணக்கே இல்லை - அமெரிக்கா

27/09/2010 16:36

2004 ஆரம்பத்தில் ஈராக் அபு கிரைப் சிறையில் அமெரிக்க ராணுவத்தினரால் ஈராக் போர் கைதிகள் வன்கொடுமை செய்யப்பட்டது ஆதாரத்துடன் வெளியானது அறிந்ததே! உடனே அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் டொனல்ட் ரம்ஸ்பீல்டு ராஜினாமா செய்ய வேண்டுமென்று குரல் எழுப்பப்பட்டது. ரம்ஸ்பீல்டு, தான் ஈராக்கில் பாதிக்கப்பட்ட போர்க்கைதிகளுக்கு நஷ்டஈடு கொடுக்க சட்டப்படி வழி கண்டுபிடித்திருப்பதாகவும், இப்போது இதுவே சரியான செயலாக இருக்க முடியுமென்றும் இதனை சரிவரச் செய்வதே தனது குறிக்கோள் என்றும் கூறி தனது பதவியைக் காப்பற்றிக்கொண்டார்.

இப்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின் பாதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு என்ன கொடுக்கப்பட்டது, எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று அமெரிக்கா இராணுவத்திடம் ஒரு கணக்கும் இல்லை. இப்போது பாதிக்கப்பட்ட ஈராக் போர் கைதிகள் 250 கும் மேற்பட்டோர் நஷ்டஈடு கேட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அவர்களுக்கு நஷ்டஈடு கிடைக்குமா என்பது இந்த வாரம் அமெரிக்க நீதிமன்றம் அளிக்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்தே அமையும்.

30 முன்னாள் கைதிகள் நஷ்டஈடு பெற அமெரிக்கா இராணுவத்தின் பட்டுவாடா துறையிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், அவை இன்னும் விசாரணையில் உள்ளதென்றும் அமெரிக்கா இராணுவம் கூறியுள்ளது. விசாரணை செய்ததில் அவர்களில் சிலர் எவ்வித பாதிப்பும் அடையவில்லை என்றும் தெரிவித்தது.

மேலும் இவர்களின் தேடுதலில் இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட நஷ்டஈடு தொகை பற்றிய கணக்குகள்  எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஒருவேளை அவை ஈராக்கின் தலைவர்கள் மூலம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதுவதாகவும் தெரிவித்தனர்.

ஈராக் மற்றும் ஆப்கன் போர்களில் உயிரிழந்த, காயமடைந்த மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு 30.9 மில்லியன் அமெரிக்கா டாலர்கள் 2003 முதல் 2006 வரையான நிதியாண்டுகளில் கொடுத்துள்ளதாக அமெரிக்கா பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றது. ஆனால் அபு கிரைப் சிறையில் வன்கொடுமை செய்யப்பட்ட போர் கைதிகள் இதிலிருந்து எவ்வித நஷ்டஈடும் பெற்றதாக தகவல் இல்லை என்று இராணுவம் கண்டுபிடித்துள்ளது.

ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட இந்த உலகமறிந்த அசிங்கம் நஷ்டஈடு கொடுக்கப்படாமல் இப்போது நீதிமன்றத்திலுள்ளது. அங்கு நடைபெறும் வாதங்கள் இழுத்தடிக்கப்பட்ட ஈராக் போரை நினைவுபடுத்துவதாக உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள முன்னாள் போர் கைதிகள் அதிகமானோர் அபு கிரைப் சிறையிலும் எஞ்சிய சிலர் அப்போது ஈராக்கிலிருந்த தற்காலிக சிறைகளில் இருந்ததாகவும், தங்களின் மீது எவ்வித குற்றமும் சுமத்தப்படாமல் சிறைபிடிக்கப்பட்டு இப்போது விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும் பொதுமக்களிடம் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இராணுவ வீரர்களுடன் சேர்ந்து செய்த சதிதான் நடந்தேறிய வன்கொடுமைகள் என்றும் அவர்கள் கூறினார்கள். 

Inneram