அப்பாவிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்யும் அமெரிக்கா-குவான்டனாமோ மர்மம் அம்பலம்

27/04/2011 10:42

குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் என்பது விக்கிலிகீஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சின்னச் சின்னக் காரணங்களுக்காக அங்கு பலர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 89 வயது முதியவரையும் கூட அடைத்துப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. சிறையை அடைக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டும் கூட இன்னும் 172 பேர் அங்கு எதிர்காலம் என்னாகுமோ என்ற பெரும் கேள்விக்குறியுடன் தவித்துக் கொண்டுள்ளனர் என்று அந்த ஆவணத் தகவல் தெரிவிக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என சகல தரப்பினரும் தவறான காரணங்களுக்காக இங்கு அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 759 ஆவணங்களை விக்கிலீக்ஸ் மூலம் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும், கார்டியனும் வெளியிட்டுள்ளன.

உலக அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய குவான்டானாமோ சித்திரவதைக் கூடத்தின் மர்மங்களை அம்பலப்படுத்தும் வகையில் இந்த ஆவணங்கள் உள்ளன. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பலர் பல வருடங்களாக விசாரணையே இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடத் தெரியவில்லை. மேலும் பலரை கட்டாயப்படுத்தி, சித்திரவதை செய்து வாக்குமூ்லம் வாங்கியுள்ளது அமெரிக்கா.

கிட்டத்தட்ட அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த, அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் ஆவணத்தை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். கடந்த 2002ம் ஆண்டு இந்த சிறைக் கூடம் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த சிறையில் நடப்பது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. இன்னும் 172 பேர் அங்கு வாடி வருகின்றனர்.

உண்மையில் இந்தக் கூடத்தில் பயங்கரமான தீவிரவாதிகளோ அல்லது எதிரி நாட்டு வீரர்களோ அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அப்பாவிகள்தான் அதிகம் உள்ளனர். அவர்களில் 89 வயதான ஆப்கானிஸ்தான் கிராமவாசியும் ஒருவர். 14 வயதான சிறுவனும் ஒருவன்.

இந்த முதியவரை ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த சிறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அவரது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான போன் எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான் இந்த முதியவரை விசாரணைக்காக கொண்டு வந்து அடைத்துள்ளதற்கான காரணம். மற்றபடி இவருக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல உள்ளூர் தலிபான் தலைவர்கள் பற்றித் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவனைக் கூட்டி வந்து அடைத்து வைத்துள்ளனர்.

இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பிற முக்கியத் தகவல்கள்:

- பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா முன்பு திட்டமிட்டிருந்ததாம். அல் கொய்தா, ஹமாஸ்,ஹிஸ்புல்லா, ஈரான் உளவுத்துறை ஆகியவற்றுடன் சேர்த்து ஐஎஸ்ஐயையும் ஒரு தீவிரவாத அமைப்பாக அது வகுத்து வைத்திருந்தது. இந்த அமைப்புகளில் ஏதாவது ஒன்றுடன் யாருக்கு்த தொடர்பு இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதை குவான்டனாமோ சிறையில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து இந்த அமைப்புகளுடன் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்களை தீவிரவாதிகளாக கருதுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்.

- சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் மனதளவில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பலர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இன்னும் பலரோ தற்கொலை செய்யவும் கடுமையாக முயன்றுள்ளனர்.

- அதேபோல ஏராளமான இங்கிலாந்து பிரஜைகளும் கூட இங்கு பல வருட காலமாக அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அல் கொய்தாவுடனோ அல்லதி தலிபானுடனோ எந்தத் தொடர்பும் இல்லை என்பது அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தும் கூட தேவையில்லாமல் அடைத்து வைத்துள்ளனர். ஜமால் அல் ஹரித் என்ற இங்கிலாந்து பிரஜையை, தலிபான்களின் சிறையில் இருந்தார் என்பதற்காக கைது செய்து குவான்டனாமோவில் அடைத்து வைத்திருந்தனர். அதேபோல பின்யாம் முகம்மது என்ற இன்னொரு இங்கிலாந்து நாட்டவரை தூக்கிலிட்டுக் கொல்லவும் அமெரிக்க ராணுவம் முயன்றுள்ளது.

- பல கைதிகளை சித்திரவதை செய்து அவர்களை வற்புறுத்தி தங்களுக்கு சாதகமாக ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்க ராணுவம் வாங்கியுள்ளது. இது நிற்காது என்று தெரிந்தும் கூட, அதை பெரிய ஆதாரமாக கருதி தொடர்ந்து அவர்களை சித்திரவதை செய்து வந்துள்ளது.

- வேறு வழியில்லாமல் பலரை அவரவர் சார்ந்த நாடுகளிடம் ஒப்படைத்தபோது, அவர்களால் அமெரிக்காவுக்கு பெரும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்தே ஒப்படைத்துள்ளது அமெரிக்க ராணுவம்.

இப்படிப்பட்ட சித்திரவதைக் கூடத்தை மூட ஒபாமா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியே என்றும் வாஷிங்டன் போஸ்ட் வர்ணித்துள்ளது. கைதிகளுக்கான அடிப்படை மனித உரிமைகளைக் கூட இந்த சிறைக் கூடத்தில் அமெரிக்க ராணுவம் கடைப்பிடிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் சாடியுள்ளது.

இந்த கைதிகள் கூட்டத்தில் சீன முஸ்லீம்களான உய்கூர் முஸ்லீம்களும் கணிசமான பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒருவரான மாத் அல் குத்தானி என்பவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்டார். இவர் செய்த தவறு என்னவென்றால், பின்லேடன் கடைசியாக காணப்பட்ட, தோரா போரா மலைப் பகுதியிலிருந்து 2001ம் ஆண்டு இவர் தப்பி வந்ததே. இதனால் இவருக்கு பின்லேடன் குறித்துத் தெரியும் என்று கூறி பிடித்து வந்து அடைத்து விட்டனர்.

இவரை பின்லேடனின் பாடிகார்டுகளில் ஒருவர் என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது. இவரை விடுதலை செய்யவே முடியாது என்றும் அது கூறி வருகிறது.

அதேபோல காந்தஹாரில் உள்ள மனு மசூதி என்ற மசூதியில் முல்லாவாக இருந்த ஒருவரையும் பிடித்துப் போட்டனர். இவருக்கு தலிபான்கள் குறித்து நன்றாக தெரியும் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும். ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலையும் இவர்களால் கறக்க முடியாததால், ஒரு வருட சித்திரவதைக்குப் பின்னர் விடுவித்து விட்டனர்.

அதேபோல காபூல், கோவ்சத் ஆகிய பகுதிகளை நன்கு அறிந்து வைத்திருந்தவரான டாக்சி டிரைவர் ஒருவரையும் கைது செய்து இந்த சிறையில் அடைத்தனர்.

அல் ஜசீரா டிவியின் செய்தியாளர் ஒருவரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்து இங்கு அடைத்து வைத்திருந்தது. 6 வருட கால சிறைவாசத்திற்குப் பின்னர்தான் அவரை விடுவித்துள்ளனர். அல் ஜசீரா குறித்து அறிந்து கொள்வதற்காக இவரைக் கைது செய்துள்ளனர்.

விக்கிலீக்ஸ், குவான்டனாமோ குறித்து வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது

one india tamil.

 

குவான்டனாமோ சிறை குறித்து வெளியான புகைப்படங்களைக் காண...