அமெரிக்காவின் பயங்கரவாத ஏற்றுமதி: விக்கிலீக்ஸில் புதிய சிஐஏ ஆவணம்

26/08/2010 13:38

அமெரிக்காவில் பயங்கரவாதத்தின் வளர்ச்சி குறித்தும் அதனால் உலக அளவில் ஏற்படும் விளைவுகள் குறித்தும் சிஐஏ (Central Intelligence Agency) தயார் செய்த ரகசிய ஆவணம் விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

"அமெரிக்காவுக்குள் அல்-காய்தா பயங்கரவாதிகள் நுழைவதைத் தடுப்பது தொடர்பாக நாம் கவனம் செலுத்தி வரும் வேளையில், உலக அளவில் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கர்களைப் பயன்படுத்துவதற்கு அல்-காய்தா முயற்சித்து வருகிறது" என்று அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கான கண்காணிப்புப் பணிகளை லஷ்கர்-இ-தொய்பா உதவியுடன் டேவிட் ஹெட்லி மேற்கொண்டதாகவும், அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுக்கு தாராளமாகச் சென்று வரும் வகையில் தாவூத் கிலானி என்ற அவரது பெயரை டேவிட் ஹெட்லி என அந்த அமைப்பு மாற்றியதாகவும் சிஐஏ ஆவணம் தெரிவிக்கிறது.

 

பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்கிற முறையில், தற்போது மற்ற நாடுகளில் உள்ள குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடாக அமெரிக்கா பார்க்கப்பட்டால், இந்த நிலை தலைகீழாக மாறும் எனவும் சிஐஏ எச்சரித்திருக்கிறது.

குற்றவாளிகளைப் பரிமாறிக்கொள்வதில் அமெரிக்கா ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாக மற்ற நாடுகள் கருதத் தொடங்கியிருப்பது, பயங்கரவாதிகளைப் பிடிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு முட்டுக்கட்டையாக அமையலாம் எனவும் அந்த ஆவணத்தில் சிஐஏ குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்காவில் பயங்கரவாதம் வளர்ந்துவருவது பற்றி யாரும் பொருட்படுத்துவதில்லை என கவலை தெரிவித்துள்ள சிஐஏ, இந்த நிலை தொடர்ந்தால் குற்றவாளிகளைக் கைது செய்தல், உளவுத் தகவல்களைப் பகிர்தல் போன்ற பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மற்ற நாடுகள் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு வழங்காது என எச்சரித்துள்ளது.