அமெரிக்காவில் குர்ஆன் அவமதிப்பு எதிரொலி காஷ்மீரில் கலவரம் - துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலி

13/09/2010 21:47

இஸ்லாமியர்களின் புனித நூல் குரான் அமெரிக்காவில் அவம‌தி‌க்க‌ப்ப‌ட்டதாக வந்த தகவல்களை அடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த காவ‌ல் துறை‌யின‌ர் நட‌த்‌திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஒரு காவலர் உயிரிழந்தார். 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பாராமுல்லா மாவட்டம் தங்மார்க் பகுதியில் ஆர்ப்பாட்டக்கார்கள் அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகளுக்கு தீ வைத்ததையடுத்து காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பட்காம் மாவட்டத்தில் ஒரு காவலர் உட்பட 4 பேர் கொல்லப்பட்டதாகவும், இதேபோல பண்டிப்போரா, புல்வாமா பகுதிகளிலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று ஒரே நாளில் மட்டும் கலவரத்திற்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முழுவதும் கேபிள் செய்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

மேலும், இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர், முட்டாள்தனமான, மனம் பேதளித்த ஒரு தனி மனிதனுடைய கருத்து அமெரிக்காவின் கருத்தை பிரதிபலிக்காது என்று கூறியுள்ளார்.

15ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்!

இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனை குறித்தும், காஷ்மீரில் உள்ள ஆயுதப்படை சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் காஷ்மீர் பிரதமர் ·பரூக் அப்துல்லாவும் கலந்துகொண்டார்.

கூட்டத்தின் முடிவில் பேச்சுவார்த்தை, விவாதம் மூலமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்று பிரதமர் தலை¨யில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது. மேலும் காஷ்மீர் மக்கள் வன்முறையை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரும் 15ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரச அழைப்பு விடுத்துள்ளது.