அயோத்தி பிரச்னைக்குப் புதிய சமரசத் தீர்வு? மூன்று தரப்பினரும் முதல்முறை சந்திப்பு

09/10/2010 20:19

அயோத்தி,அக்.8: அயோத்தி பிரச்னைக்கு புதிய சமரசத் தீர்வு காணப்பட்டிருப்பதாக அதில் சம்பந்தப்பட்டுள்ள தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

வக்ஃப் வாரியம் சார்பில் வழக்கு தொடுத்த ஹஷீம் அன்சாரி (90), நிர்மோஹி அகாடாவின் பஞ்ச ராம்தாஸ், ராமஜன்மபூமி அறக்கட்டளையின் ராம்விலாஸ் வேதாந்தி ஆகியோர் அயோத்தியில் ஹனுமான் கடி (ஆஞ்சநேயர் ஆலயம்) நிர்வாகி மகந்த் ஞானதாஸ் இல்லத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனையில் ஈடுபட்ட அவர்கள் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்கக்கூடிய தீர்வைத் தாங்கள் கண்டுவிட்டதாகத் தெரிவித்தனர்; ஆனால் அதை விவரிக்க மறுத்துவிட்டனர்.

"இரு மதங்களையும் சேர்ந்தவர்களின் மத உணர்வுகளையும் மன உணர்வுகளையும் மனதில் கொண்டு இந்தத் தீர்வைக் கண்டிருக்கிறோம்; இது இரு சமூகத்தவர் இடையில் எதிர்காலத்தில் ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க முதல்படியாக இருக்கும். அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கருத்தில் கொண்டே இந்தத் தீர்வை அடைந்திருக்கிறோம்.

மசூதி கட்டுவதற்கு ஹிந்துக்கள் கரசேவை மூலம் முஸ்லிம்களுக்கு உதவவும், கோயில் கட்ட முஸ்லிம்கள் கரசேவை மூலம் ஹிந்துக்களுக்கு உதவவும் உகந்த சூழ்நிலையை உருவாக்க முடிவு செய்திருக்கிறோம். இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றத்தாலோ நாடாளுமன்றத்தாலோ தீர்வு கண்டுவிட முடியாது என்பதை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாகக் கூறுவோர் உணர வேண்டும்' என்றார் ஞானதாஸ்.

"சமரசத் தீர்வு காணும் பொறுப்பை ஹஷீம் பாய் என்னிடம் ஒப்படைத்தார். நான் சம்பந்தப்பட்ட தரப்பைச் சேர்ந்த மூன்று பேரையும் சந்திக்கவைத்துவிட்டேன். என்னுடைய வீட்டில் ரோசா - இப்தார் விருந்து நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அயோத்தி பிரச்னைக்கு இங்கு தீர்வு காணப்படும்' என்றார் ஞானதாஸ்.

அவர் சொன்னதை பஞ்ச் ராம்தாஸýம் ஆமோதித்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக யாராவது உச்ச நீதிமன்றத்தை அணுகினாலும் எங்களுடைய சமரச முயற்சி தொடரும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் ஹஷீம் அன்சாரி.

இந்த விஷயத்தை அரசியலாக்க முயற்சிப்போருக்கு நாங்கள் இடம் தரவே மாட்டோம் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இந்த சமரசத் தீர்வை ஹிந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்றுக்கொள்வார்கள், எதிர்க்க மாட்டார்கள் என்றார் நிர்மோஹி அகாடா தலைவர் ராம்தாஸ். 

இந்தப் பிரச்னை தொடர்பாக அறிக்கைகள் வெளியிடுவதை அரசியல்வாதிகள் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற ராம்தாஸ், எங்களுடைய சமரசத் தீர்வால் வகுப்பு ஒற்றுமையும் சமாதானமும் நாடு முழுக்க ஏற்படும் என்றார்.

கோயில் - மசூதி விவகாரம் தொடர்பாக நாடு முழுக்க ஏராளமாக ரத்த ஆறு ஓடிவிட்டது, இனி சாந்தியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹஷீம் அன்சாரியை இப்போதுதான் முதல் முறையாகச் சந்திக்கிறேன், அவருடன் உரையாடியதால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் என்றார் ராம ஜன்மபூமி அறக்கட்டளையின் மூத்த உறுப்பினரான ராம்விலாஸ் வேதாந்தி.

இப்போது காணப்பட்டுள்ள சமரசத் தீர்வு ஹிந்து, முஸ்லிம்களிடையே நிரந்தர ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Dinamani