அயோத்தி வழக்கில் 24-ல் தீர்ப்பு: ஊடகங்களுக்கு வழிகாட்டு நெறிகள்

19/09/2010 16:21

அயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்த செய்தியை ஒளிபரப்புவதில் கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று மின்னணு ஊடகங்களுக்கு செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் அயோத்தி ராமர் ஜென்ம பூமி- பாபர் மசூதி நில விவகாரம் குறித்த வழக்கில் செப்டம்பர் 24-ல் தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. சர்ச்சைக்குரிய இந்த வழக்கால் நாடு முழுவதும் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் பதற்றத்தை தணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகும்போது சமூக ஒற்றுமையை காப்பாற்றும் வகையில் கட்டுப்பாட்டுடன் செய்தி ஒளிபரப்ப வேண்டும் என்று செய்தி ஒளிபரப்பாளர்கள் கூட்டமைப்பு அனைத்து மின்னணு ஊடகங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து அந்த அமைப்பு சில வழிகாட்டு நெறிகளையும் வெளியிட்டுள்ளது.

தீர்ப்பு ஒளிபரப்பின்போது, பாபர் மசூதி இடிப்பு காட்சிகளை கண்டிப்பாக ஒளிபரப்பக்கூடாது. தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்த ஊகச் செய்திகளை முன்கூட்டியே வெளியிடக்கூடாது. அதேபோல், தீர்ப்புக்குப் பின்னர் நிலைமை எப்படியிருக்கும் என்பது குறித்தும் செய்தி ஒளிபரப்பக்கூடாது.

தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள், ஆதரித்து நடைபெறும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை செய்தியாக வெளியிடக்கூடாது. இதேபோல் வகுப்பு கலவரத்தை தூண்டும் எந்த செய்தியையும் வெளியிட வேண்டாம் என்று அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Dinamani