அயோத்தியில் ராமர் கோயில் கட்ட சட்டம் இயற்றினால்தான் முடியும்: ஆர்எஸ்எஸ் கருத்து

02/09/2010 10:29

போபால், செப். 1: நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றினால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும் என ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் குறிப்பிட்டார்.

 

போபாலில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

 

அயோத்தி தொடர்பான வழக்கில் ஹிந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஹிந்துக்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்தாலும் கூட, ராமர் கோயில் கட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றே விரும்புகிறோம்.

 

ஏனென்றால், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்றே தீர்ப்பு வந்தாலும் அதை அரசு அமல்படுத்தும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. அத்துடன் உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் மேல் முறையீடு செய்யக் கூடும்.

 

ஷாபானு வழக்கில் அப் பெண்ணுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டபோதும், அரசு அதை அமல்படுத்தாமல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது என்றார்.

 

கருத்தரங்கில் அவர் பேசியதாவது: நாடாளுமன்றத் தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மும்பை தாக்குதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அஜ்மல் கசாப் ஆகியோரது விவகாரங்களில் நீதிமன்றத் தீர்ப்பை அரசு அமல்படுத்தினால், அயோத்தி விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை நாங்களும் ஏற்போம்.

 

ஆனால், நீதிமன்றங்களின் தீர்ப்பை அவர்களே (அரசு) மதிக்காதபோது, மற்றவர்கள் மதிக்க வேண்டும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? ஷாபானு விவகாரம் போலவே, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றார் ராம் மாதவ்.

 

(விவாகரத்து செய்யப்பட்ட ஷாபானு என்பவர், கணவரிடம் ஜீவனாம்சம் கோரினார். அவரது கணவர் ஜீவனாம்சம் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

இது ஷரியத் சட்டத்துக்கு எதிரானது என எதிர்ப்பு எழுந்ததால் சட்டத்தில் திருத்தம் செய்த மத்திய அரசு, ஜீவனாம்சத்தை மத்திய அரசே தரும் என அறிவித்தது).

Dinamani