அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக சிரிய அரசு அறிவிப்பு

02/06/2011 15:04

 

டமாஸ்கஸ்: சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அசாட் பொதுமன்னிப்பு வழங்க முன்வந்துள்ளார். சிரியாவில் அரசியல் மறுசீரமைப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு என்பனவற்றை வலியுறுத்தி பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்று வரும் நிலையிலேயே கைதிகளுக்கு ஜனாதிபதி பஷார் அசாட் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

ஆனால் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான அசாட்டின் அறிவிப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளதுடன், இந்நடவடிக்கையில் சதித்திட்டம் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அரசியல் கைதிகளின் விடுதலையை எதிர்க்கட்சிகள் நீண்டகாலம் வலியுறுத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் இடம் பெற்ற அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட 10,000 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தீவிரப்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக சிரிய எதிர்க்கட்சியினர் துருக்கியில் ஒன்று கூடியுள்ள நிலையில் பொது மன்னிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏ.பி.

thinakkural.com