அரசுப் பணிகளில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு

27/08/2010 15:16

அரசுப் பணிகளில் சிறுபான்மையினரின் தேர்வு விகிதம் அதிகரித்துள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தில்லியில் வியாழக்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சிறுபான்மையினர் நல விவகாரத் துறை குறித்து விவாதிக்கப்பட்டது.

கடந்த 2006-07-ல் ஆண்டில் மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கு சிறுபான்மையினர் 6.7 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதுவே 2009-10-ம் ஆண்டில் 7.9 சதவீதமாக உயர்ந்தது. இதன் மூலம் அரசுப் பணிகளில் சிறுபான்மையினரின் எண்ணிக்கை 13.01 சதவீதமாக உள்ளது.

சிறுபான்மையினர் நலனுக்கான 15 அம்ச திட்ட செயல்பாடு குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குழந்தை நீதி சட்டம்: குழந்தைகள் நீதி சட்டத்தில் இருந்த பாரபட்சம் நீக்கப்பட்டு அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகள் நீதி சட்டத்தின்படி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) தொழுநோய், காசநோய் மற்றும் பாலியல் பாதிப்பு நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் மூலம் ஏற்கெனவே இச்சட்டத்தில் இருந்த பாரபட்சம் நீக்கப்பட்டுள்ளது.