அவுரங்கசீப் எழுதிய குர்-ஆன் ஜெர்மெனியில் ஏலம்

04/09/2010 11:49

முகலாய மன்னர் அவுரங்கசீப் எழுதிய குர்-ஆன் புத்தகம், ஜெர்மனியில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது.

இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்ட முகலாய மன்னர் அவுரங்கசீப். இவருடைய ஆட்சிக் காலத்தில் அவுத் என்ற பகுதியின் கவர்னராக இருந்தவரின் கொள்ளு பேரன் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்டில் வசிக்கிறார். ஆங்கிலேயரின் படையெடுப்பால் கடைசி முகலாய மன்னர் ஆட்சியை இழந்த போது தனக்கு நெருக்கமானவர்களை அழைத்து, தேவையான பரிசு பொருட்களை எடுத்துச் செல்லும்படி கூறியுள்ளார்.அவுத் கவர்னராக இருந்தவர், அவுரங்கசீப் தன் கைப்பட எழுதிய குர்-ஆன்  புத்தகத்தை எடுத்துக் கொண்டார். அவருடைய வாரிசுகள் இந்த புத்தகத்தை பாதுகாப்பாக பேணி வைத்திருந்துள்ளனர்.

இந்த குர்-ஆன் புத்தகத்தின் இடையே இடையே தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. அரிசி மற்றும் இயற்கை பொருட்களால் கலை வேலைப்பாடுகள் இந்த புத்தகத்தில் செய்யப்பட்டுள்ளன.ஜெர்மனியில் உள்ள பாம்பர்க் பகுதியில் உள்ள ஏல மையத்தில் அடுத்த மாதம் இந்த புத்தகம் ஏலம் விடப்பட உள்ளது. "இதன் ஆரம்ப விலை 55 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்படும்' என, ஏல மையத்தின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.

Dinamalar