ஆகஸ்டு 31 ஆம் தேதி பிளாக்பெரி செல்போன்களுக்கு தடை உறுதி

23/08/2010 13:51

ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் கட்டுப்பாட்டு கருவியை இந்தியாவில் அமைக்காவிட்டால் பிளாக்பெரி செல்போன்களுக்கு தடை விதிக்கப்படுவது உறுதி என்று மத்திய அரசு மீண்டும் எச்சரித்துள்ளது.

பிளாக்பெரி செல்போன்கள் வாயிலாக அனுப்பப்படும் குறுந்தகவல் மற்றும் மின் அஞ்சல் போன்றவற்றை இந்தியாவிலிருந்து கண்காணிக்கும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தொலை தொடர்பு ஆணையம் ரிசர்ச் அன்ட் மோஷன் நிறுவனத்திற்கு, உத்தரவிட்டிருந்தது. இதற்காக டெல்லியில் கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என்றும் அந்நிறுவனத்திற்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கட்டுப்பாட்டு கணினிகளை இந்தியாவில் அமைப்பது சாத்தியமில்லை என்றும், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கேட்கும்போது, பிளாக்பெரி போன்களிலிருந்து அனுப்பப்படும் குறுந்தகவல்கள் மற்றும் மின் அஞ்சல்கள் குறித்து விவரங்கள் வழங்க தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இதனை ஏற்க மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் மறுத்துவிட்டது. இதனால் ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் பிளாக்பெரி செல்போன்களின் சர்வரை இந்தியாவில் அமைக்கவில்லை என்றால் அவ்வகை போன்களை தடை செய்வது உறுதி என்று உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிளாக்பெரி செல்போனில் உள்ள அதிநவீன செக்குரிட்டி காரணமாக அந்த மொபைல் போனில் இருந்து அனுப்பும் செய்திகளை கணினி கட்டுப்பட்டு அறையால் கண்காணிக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் துபாய், சவுதி அரேபியா போன்ற நாடுகள் பிளாக்பெரி மொபைல் போனின் சில சேவைகளை ரத்து செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.