ஆக்கிரமிப்பு படைகளாக நேட்டோ மாறக்கூடாதென கர்சாய் எச்சரிக்கை

02/06/2011 15:02

 

காபூல்: ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு படைகளாக மாறக்கூடாதென அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேட்டோ படைகளால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டமையை தொடர்ந்தே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள ஹர்சாய்,இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் தொடருமானால் குறிப்பிட முடியாத நடவடிக்கைகள் தொடரும் எனவும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கிளர்ச்சிக்காரர்கள் மீதான தாக்குதல் என்ற பெயரில் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை அனுமதிக்க முடியாது.ஆப்கான் மக்களின் பொறுமை சோதிக்கப்பட்டுவிட்டது. நட்புப் படைகள் என்ற ரீதியிலேயே நேட்டோ படையினரை நாம் நோக்குகின்றோம். இந்நிலையில் ஆப்கான் மக்கள் மீதான தாக்குதலை நேட்டோ படையினர் நிறுத்தாவிடில் ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினரின் பிரசன்னம்,ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும் எனவும் கர்சாய் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் வெற்றியாளனாக கர்சாய் தன்னை உருவகப்படுத்திக்கொள்ள முனைவதனையும் தசாப்தகாலமாக தலிபான்களுக்கு எதிராக போராடும் மேற்குலக படைகளிலிருந்து விலகி நிற்பதற்கு கர்சாய் முனைவதனையும் அவரது புதிய உரை கோடிட்டுக் காட்டியுள்ளது. மக்களின் வீடுகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதை நேட்டோ படைகள் நிறுத்த வேண்டும்.அவர்கள் நிறுத்தாவிடில் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு ஆப்கான் அரசு தள்ளப்படும் எனத் தெரிவித்துள்ள கர்சாய்,நேட்டோ படைகள் பொதுமக்களின் இல்லங்கள் மீதும் மக்கள் மீதும் தாக்குதல் நடத்துவதை நிறுத்தாவிடில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விரிவாகக் கூறவில்லை.


நேட்டோ தளபதிகளை நூறுதடவை எச்சரித்திருப்பதாக சுட்டுவிரலைக் காட்டி அழுத்திக் கூறியுள்ள கர்சாய்,மீண்டும் இச்செய்தியை வலியுறுத்திக் கூறுவதற்கு இவ்வாரமும் தளபதிகளுடன் சந்திப்பை தொடரவுள்ளதாக தெரிவித்தார்.
ராய்ட்டர்ஸ்

thinakkural.com