ஆப்கன் போர் ரகசிய ஆவணங்கள்: பேச்சு நடத்த பென்டகன் முன்வந்தது: விக்கிலீக்ஸ் தலைவர் தகவல்

22/08/2010 10:37

ஆப்கானிஸ்தான் போர் குறித்த ரகசிய ஆவணங்கள் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகன் அதிகாரிகள் தன்னிடம் பேச்சு நடத்த முன்வந்ததாக விக்கிலீக்ஸ் தலைவர் ஜுலியன் அஸ்சங் கூறியுள்ளார்.

 

ஆப்கானிஸ்தான் போர் தொடர்பாக அமெரிக்க உளவுத் துறை ரகசியமாக திரட்டிய ஆவணங்களை இணையதளத்தின் மூலம் அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ். இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட தலிபான்களுக்கு, பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ உதவியது தெரியவந்ததது.

 

இந்நிலையில் விக்கிலீக்ஸ் தலைவர் ஜுலியன், வியாழக்கிழமை இது தொடர்பாக கூறுகையில், அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை தலைமையகமான பென்டகனில் இருந்து சில அதிகாரிகள், எங்களுடைய வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டனர். நாங்கள் வைத்துள்ள ரகசிய ஆவணங்கள் குறித்து பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் என்றார்.

 

ஆனால் விக்கிலீக்ஸýடன் பேச நாங்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று பென்டகன் கூறியுள்ளது. இது தொடர்பாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் பிரெயன் வொய்ட்மேன் கூறுகையில், விக்கிலீக்ஸின் வழக்கறிஞர்கள் என்று கூறியவர்களுடன் பென்டகன் அதிகாரிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டது உண்மைதான். ஆனால் அதற்கென்று எந்த விஷேச காரணமும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

எனினும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் அமெரிக்கா மேற்கொண்ட போர் தொடர்பான பல்வேறு ரகசிய ஆவணங்கள் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் உள்ளது. அவற்றை வெளியிடும் முன் கைப்பற்றிவிட வேண்டுமென்று அமெரிக்கா பல்வேறு வழிகளில் முயற்சித்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.