ஆப்கானிஸ்தான் எதிர்காலம் தொடர்பில் சர்வதேச மாநாடு

08/12/2011 22:47

 

மாநாட்டில் சர்வதேச தலைவர்கள்நேட்டோ தலைமையிலான சர்வதேசப் படைகள் 2014ல் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகிய பின்னரும் சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்துஉதவிகளும் ஆதரவும் வழங்கி வருவது எதிர்காலத்திலும் அந்நாட்டில் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய மிகவும் அவசியம் என ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்ஸாய் கூறியுள்ளார்.

ஆப்கானின் எதிர்காலம் தொடர்பில் ஜெர்மனியின் பான் நகரில் ஆரம்பித்துள்ள சர்வதேச மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

"தாலிபான்கள் சமரசத்துக்கு வருவது அவசியம்"

"ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கு இராணுவ ரீதியான தீர்வு இருக்க முடியாது, அரசியல் ரீதியான தீர்வுதான் இருக்க முடியும்."

ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் கீடோ வெஸ்டர்வெல்

இந்த மாநாட்டில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கிறார்கள்.

2001ல் ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதன் பின்னர் சர்வதேச சமூகம் சந்தித்திருந்த அதே பான் நகர விடுதியில்தான் இந்த மாநாடு நடக்கிறது.

2014க்குப் பின்னர் ஆப்கானிஸ்தானை கட்டியெழுப்புவது தொடர்பிலே எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கு தாலிபான்களும் உடன்படாது போனால், இலக்குகளை எட்டுவது சிரமமாகிப்போகும் என பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.

நிதி உதவி

மாநாட்டை துவக்கிவைத்து உரையாற்றிய ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் கீடோ வெஸ்டர்வெல், ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்துக்கு இராணுவ ரீதியான தீர்வு இருக்க முடியாது, அரசியல் ரீதியான தீர்வுதான் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு என கொடையாளி நாடுகளிடம் உதவித் தொகைக்கான உறுதிமொழிகளைப் பெறூவது இந்த மாநாட்டில் நடைபெறவில்லை என்றாலும், இந்த மாநாட்டை ஒட்டி உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் பெரிய கொடையாளி நாடுகள் சந்திக்கவுள்ளன.

பாகிஸ்தான் புறக்கணிப்பு

ஆப்கானிஸ்தானின் அண்டை நாடான பாகிஸ்தான் இந்த மாநாட்டைப் புறக்கணித்துள்ளது.

ஆப்கானுடனான எல்லையில் பாகிஸ்தான் இராணுவ நிலை மீது அண்மையில் நேட்டோ நடத்திய வான் தாக்குதலில் பாகிஸ்தானிய சிப்பாய்கள் 24 பேர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளது.

பாகிஸ்தான் சிப்பாய்கள் கொல்லப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்நாட்டின் தெற்கில் உள்ள முக்கிய விமான தளம் ஒன்றிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுகிறார்கள் என்பதை பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் உறுதிசெய்துள்ளார்.

சிப்பாய்கள் கொல்லப்பட்டது தொடர்பில் பாகிஸ்தான் மக்களிடையே பெரும் ஆத்திரம் உருவாகியுள்ளது.

நேட்டோ பயன்படுத்தி வந்த தமது விமான தளங்களை பாகிஸ்தான் மூடியிருப்பதோடு, தங்கள் நாட்டின் வழியாக ஆப்கானில் உள்ள நேட்டோ படைகளுக்கு பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதையும் பாகிஸ்தான் தடுத்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் நேட்டோ படைகள் பாகிஸ்தானிடம் முறைப்படி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் சிப்பாய்கள் உயிரிழந்த அந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அரசாங்கம் கோரிவருகிறது.

https://www.bbc.co.uk/tamil/global/2011/12/111205_afghanbonn.shtml