இந்திய அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது அயோத்தி பிரச்னை

30/08/2010 10:14

பாபர் மசூதி விவகாரம் இந்திய அரசியலில் மீண்டும் முக்கியத்துவம் பெற உள்ளது.

சர்ச்சைக்குரிய இடம் இந்துகளுக்குச் சொந்தமா அல்லது முஸ்லிம்களுக்குச் சொந்தமா என்பது குறித்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் விரைவில் தீர்ப்புக் கூற உள்ளது.

தீர்ப்பு யாருக்குச் சாதகமாக இருந்தாலும் அது அரசியல் ரீதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தீர்ப்பு வெளியாகும் தினத்தை அனைவரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக இருப்பதை அடுத்து உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் பிரச்னைக்குரிய இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முக்கியத்துவம் கருதி பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேரடியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் தீர்ப்பை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழு முக்கிய ஆலோசனை நடத்தியது.

தீர்ப்பை எதிர்கொள்ள தயாராகி வந்தாலும் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து கருத்துக் கூற காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மறுத்துவிட்டார். தீர்ப்பு இப்படிதான் இருக்கும் என்று கணித்துச் சொல்வது முட்டாள்தனமானது மட்டுமல்ல, பொறுப்புள்ளவர்கள் யாரும் செய்யக் கூடிய செயல் அல்ல. அதுவும் பாபர் மசூதி போன்றதொரு விஷயத்தில் தீர்ப்பு பற்றி முன்கூட்டியே கருத்து கூற இயலாது என்றார் அவர்.

"ராம ஜென்ம பூமி விவகாரம் மக்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று பாஜக மட்டும் சொல்லவில்லை. நாடு முழுவதிலும் அந்தக் கருத்து பரவலாக உள்ளது. இந்ந நிலையில் நீதிமன்றம் எவ்வாறு தீர்பளிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் உள்ளது. இதுபோன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்கள் எல்லோருடைய கருத்துகளின் அடிப்படையில்தான் தீர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்' என்றார் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர்.

ஆனால், அந்தக் கட்சியின் மற்றொரு தலைவர் வினாய் கட்டியார் இதுபற்றி கூறுகையில், நம்பிக்கை, பற்று போன்ற விஷயங்களை நீதிமன்றம் மூலம் தீர்க்க முடியாது. இந்த விஷயத்தில் பொதுக் கருத்தை எட்ட அரசு முயற்சிக்க வேண்டும். ராமரை அந்த இடத்தில்  வழிபட்டுள்ளனர். அயோத்தியிலிருந்து யாரும் ராமரை அகற்ற முடியாது என்றார் கட்டியார்.

பாபர் மசூதிக் குழு:÷பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்க்காமல் பேச்சு மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பாபர் மசூதி நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர், அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அழைத்து இந்தப் பிரச்னையை பேசித் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாபர் மசூதி நடவடிக்கைக் குழு தலைவர் ஜாவித் ஹபீப் கேட்டுக்கொண்டுள்ளார்.

பரபரப்பான இந்த தீர்ப்பை நாடே எதிர்பார்த்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்பட்டால் அதைச் சமாளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாயாவதி அரசு செய்து வருகிறது.