இந்திய டாக்டரிடம் மன்னிப்பு கேட்டது ஆஸ்.,

24/12/2010 14:40

ஆஸ்திரேலிய அரசு இந்திய டாக்டர் ஹனீப்பை தவறாக கைது செய்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு உள்ளது. அதோடு இழப்பீடாக கணிசமான தொகையை அவருக்கு வழங்கி உள்ளது.
 

 


இங்கிலாந்து நாட்டில் கிளாஸ்கோ நகரில் உள்ள விமான நிலையத்தில் 2007ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக இந்தியர் சபீல் அகமது கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


சபீல் அகமதுவின் உறவினர் ஹனீப். 31 வயதான இவர் ஒரு டாக்டர். இவர் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்டு கோஸ்ட் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். அவரை 2007ம் ஆண்டு ஜுலை மாதம் 2ந் தேதி ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்தனர்.


இங்கிலாந்து நாட்டுக்கு ஹனீப் சென்றபோது, அவர் தன் மொபைல் போன் மற்றும் சிம்கார்டுகளை சபீல் அகமதுவின் வீட்டில் தவறுதலாக விட்டு விட்டு வந்தார். இதை தொடர்புபடுத்தி அவர் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு அளித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.


அவர்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யாமல் 12 நாட்கள் சிறை வைக்கப்பட்டார். இதன் பிறகு கிளார்க் கமிஷன் விசாரணை நடத்தி ஹனீப் குற்றமற்றவர் என்று அறிவித்தது. இந்த நிலையில் ஹனீப் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.


மானநஷ்ட வழக்கை கைவிடுவதற்காக அவருடன் ஆஸ்திரேலியா பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் அவர் வழக்கை கைவிடுவது என்றும், அதற்கு பதிலாக அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்பது என்றும், அதோடு இழப்பீடாக ஒரு தொகை வழங்குவது என்றும் முடிவானது.


அதன்படி ஆஸ்திரேலிய அரசாங்கம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. அட்டர்னி ஜெனரல் அலுவலகம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளும் அறிக்கையை வெளியிட்டது. இழப்பீடு பற்றிய விவரங்களை அது ரகசியமாக வைத்துள்ளது. இழப்பீடு தொகை 10 லட்சம் டாலராக இருக்கும் என்று கூறப்படுகிறது.


ஹனீப் இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இப்போது ஆஸ்திரேலிய அரசுடன் உறவு சுமூகமானதை தொடர்ந்து அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி பிரிஸ்பேன் நகரில் உள்ள கோல்டுகோஸ்ட் மருத்துவமனையில் பணியாற்ற விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.


ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் ஏற்பட்ட சமரசம் குறித்து டாக்டர் ஹனீப் மகிழ்ச்சி தெரிவித்தார். போதுமான அளவு இழப்பீடு கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

nakkheeran.in