இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சலுகைகள்: எஸ்.எம்.கிருஷ்ணா

16/06/2011 11:40

இந்த வருடம் முதல் மக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் இந்திய ஹஜ் பயணிகளுக்கு மேலும் சில புதிய சலுகைகளை, மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புனித பயணம் செல்லும் ஹஜ் பயணிகளுக்கு மத்திய அரசு பல சலுகைகளை கொடுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 671 பேர் ஹஜ் பயணத்தை எந்தவித சிரமமும் இன்றி முடித்து விட்டு இந்தியாவுக்கு திரும்பி இருக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் நான் ஜித்தா நகருக்கு சென்று இருந்தபோது அங்கு சவூதி வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து மனு ஒன்று கொடுத்துள்ளேன். அதில், இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்டு வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். எனவே இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

 

மக்கா மதீனாவுக்கு சிரமம் இன்றி இந்திய ஹஜ் பயணிகள் சென்று வரவும், இந்திய அரசின் சார்பில் ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்தியாவில் இருந்து கூடுதல் விமானங்கள் விட ஏற்பாடு செய்து இருக்கிறோம். மேலும் 70 வயதான ஹஜ் பயணி, தனக்கு துணையாக ஒருவரை அழைத்து செல்ல அனுமதிக்கப்படுவார். அவர்களுக்கு உறுதி அளிக்கப்பட்ட டிக்கெட் கிடைக்கும். இந்த சலுகை இந்த ஆண்டு முதலே அமல்படுத்தப்படும்.

 

ஹஜ் பயணத்துக்கு 3 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், குலுக்கலில் இடம் கிடைக்காதவர்களுக்கு, 4 வது ஆண்டில் உடனடியாக அனுமதி வழங்கப்படும். அவர்கள் குலுக்கலில் கலந்து கொள்ள வேண்டியது இல்லை. ஹஜ் பயணத்துக்கான பாஸ்போர்ட்டுகளை விரைவாக பரிசீலித்து, அனுமதி அளிக்குமாறு பாஸ்போர்ட் வழங்கல் துறையை கேட்டு இருக்கிறோம். இதற்காக தனியாக முகாம்கள் நடத்தி விரைவாக செயல்பட உத்தரவிட்டு இருக்கிறோம்.

 

ஜித்தாவில் இருக்கும் இந்திய தூதரக அலுவலக வளாகத்தில், இந்திய ஹஜ் பயணிகளின் பயன்பாட்டுக்காக ஹெலிகாப்டர் தளம் ஒன்றை அமைத்து இருக்கிறோம். ஹஜ் பயணிகளுக்கு, இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் முகாம்கள் அமைத்து முறையான பயிற்சி அளிக்கப்படும் என்றார்.


 

inneram.com