இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்

07/06/2011 20:06

ஆசிய நாடுகளில் இயற்கைப் பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 2 வது இடத்தில் உள்ளதாக ஐ.நா. நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னை அவசரநிலை நிர்வாக பயிற்சிப் பட்டறைத் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யூனிசெபின் நாடுகளுக்கான உதவிப் பிரநிதி டேவிட் மெக்லாப்லின் இது குறித்துக் கூறுகையில், இந்தியாவின் நிலப்பகுதிகளில் 60 சதவீதம் பூகம்ப ஆபத்துகள் நிறைந்தது.

 

1 கோடியே 40 லட்சம் ஹெக்டேர்கள் நிலப்பகுதிகளில் வெள்ள அபாயம் உள்ளது. கடற்கரைப்பகுதிகளில் 8,000 கி.மீ. பகுதிகள் கடும் புயல் காற்று ஆபத்துகளைச் சந்திக்கக்கூடியவை என்றார். இந்த இயற்கைப் பேரழிவினால் ஏற்படும் நஷ்டம் இந்தியாவின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாகவோ ஒட்டுமொத்த அரசு வருவாயில் 12 சதவீதமாகவோ இருக்கலாம் என்று உலக வங்கி ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

இந்தியாவில் உள்ள 27 மாநிலங்கள் இயற்கைப் பேரழிவுக்கு இலக்காகும் அபாயம் உள்ளது. இதனால் நாட்டின் வருவாயில் குறிப்பிடத்தகுந்த பங்கு பேரழிவு நிவாரணத்திற்குச் செலவிடவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்றும் உலக வங்கி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக இந்த யூனிசெப் நிபுணர் தெரிவித்தார். எனவே நமது அரசு எந்திரம் இயற்கைப் பேரழிவு நடந்து முடிந்தவுடன் செய்யும் வழக்கமான பணிகளை விட அதிக கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது.

 

2010 ம் ஆண்டு மட்டும் 373 இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் சுமார் 2,96,000 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 2 கோடி பேர் வீடிழந்துள்ளனர். இதன் மூலம் ஏற்பட்ட செலவினம் மட்டும் 110 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இந்த இயற்கைப் பேரழிவுகளில் 77 சதவீதம் பூகம்பம் மற்றும் சுனாமிப் பேரலைகளால் ஏற்பட்ட மிகப்பெரிய அழிவுகளாகும். 19 சதவீம் மட்டுமே மழை, வெள்ளம் மற்றும் பிற இயற்கைச் சீற்றங்கள் பங்களித்துள்ளன என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமீப காலங்களில் இயற்கைச் சீற்றங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக 2010 ம் ஆண்டு பெரும் இயற்கை அழிவுகளைச் சந்தித்துள்ளதாக யூனிசெப் நிபுணர் டேவிட் தெரிவித்துள்ளார். இதனால் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளைத் தடுக்க சில தீவிர நடைமுறைகளை அரசு பரிசீலிக்க வேண்டும் என்று டேவிட் தெரிவித்துள்ளார்.

newsonews.com