இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட முடியாது:ஐகோர்ட்

05/12/2010 11:05

ஜெயின் சமூகத்தினரின் பண்டிகையையொட்டி, இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னை இறைச்சி வியாபாரிகள் சங்க செயலாளர் அன்வர் பாஷா சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர்,

’’அரசு உத்தரவுப்படி மகாவீர் ஜெயந்தி அன்று இறைச்சி கடைகளை மூடி வருகிறோம். இந்த நிலையில், ஜெயின் சமூகத்தினரின் `பர்யூசன் பர்வா' பண்டிகையையொட்டி, 8 நாட்களுக்கு இறைச்சி கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு ஜெயின் மகா மண்டல் சங்கம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது. இதனை பரிசீலிக்கும்படி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.

 

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு நாங்கள் மனு கொடுத்துள்ளோம். அந்த மனுவை பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’என்று கூறியிருந்தார்.

நீதிபதிகள் தர்மாராவ், அரிபரந்தாமன் ஆகியோர் இந்த மனுவை விசாரித்து, இறைச்சி கடைகளை 8 நாட்கள் மூடுவதற்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தனர்.

அவர்கள் தங்கள் தீர்ப்பில், ’ஜெயின் சமூகத்தினரின் கோரிக்கையை ஏற்று மகாவீர் தினத்தன்று இறைச்சி வெட்ட தமிழக அரசு தடை விதித்துள்ளது.

`பர்யூசன் பர்வா' பண்டிகைக்காக 8 நாட்கள் இறைச்சி கடைகளை மூடும்படி உத்தரவிட முடியாது. இந்த விஷயத்தில் அரசே முடிவெடுத்துவிட்டதால் வழக்கு முடித்து வைக்கப்படுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

nakkheeran.in