இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னைக்கு ஓராண்டுக்குள் தீர்வு: அமெரிக்கா

04/09/2010 11:26

இஸ்ரேல் - பாலஸ்தீன நாடுகளுக்கு இடையே நிலவும் முக்கியமான பிரச்னைகளுக்கு இன்னும் ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸýக்கு இடையேயான முதல் சுற்று நேரடிப் பேச்சு வாஷிங்டனில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 2) நிறைவு பெற்றது.

 

இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தரப்பில் பங்கேற்ற சிறப்பு பிரதிநிதி ஜார்ஜ் மிட்ஷெல், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான முக்கியமான பிரச்னைகளுக்கு ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

 

மேலும் அவர் கூறியது: முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் முக்கியமான பிரச்னைகளை பேசித் தீர்த்துக் கொள்வதென இரு நாட்டு தலைவர்களும் முடிவெடுத்துள்ளனர். அடுத்த சுற்றுப் பேச்சு செப்டம்பர் 14, 15 ஆகிய இரு நாள்கள் நடக்கும்.

 

அடுத்த சுற்றுப்பேச்சு மத்திய கிழக்கு பகுதியில்தான் நடைபெறும். ஆனால் இடம் இறுதி செய்யப்படவில்லை.

 

இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னையால் எந்தளவுக்கு தங்களது நாட்டு மக்கள் பாதிப்படைந்துள்ளனர் என்பதை இரு தலைவர்களும் உணர்ந்துள்ளனர்.

 

இதனால் இனிமேலும் நேரடிப் பேச்சு தடைபடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

 

இந்த உத்வேகத்துடனும், நம்பிக்கையுடனும் பேச்சு நடைபெற்றால் நிச்சயம் குறுகிய காலத்திலேயே இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு கண்டு அமைதியை நிலைநாட்டுவதற்கான உடன்பாட்டை எட்டிவிடலாம்.

 

இரு தலைவர்களும் தொடர்ந்து பேச்சு நடத்துவார்கள்; நிரந்தரத் தீர்வை எட்டுவார்கள் என்ற ஆழமான நம்பிக்கையை அதிபர் ஒபாமா வைத்துள்ளார். ஒபாவின் இந்த நம்பிக்கை நிறைவேறிவிட்டால் மத்திய கிழக்கில் அமைதி என்ற அவரது கனவும் நனவாகிவிடும்.

 

இரு ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாட்டு தலைவர்களும் நேரடிப் பேச்சை தொடங்கியுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

 

இந்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தனது முழு அளவிலான ஒத்துழைப்பை அளிக்கிறது என்றார் ஜார்ஜ் மிட்ஷெல்.

 

பிரான்ஸ் அதிபர், செüதி மன்னருக்கு ஒபாமா நன்றி: இதனிடையே, இஸ்ரேல்-பாலஸ்தீன நாடுகளுக்கு இடையேயான நேரடிப் பேச்சுக்கு முழு ஆதரவு அளிப்பதற்கு பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸிக்கும், செüதி மன்னர் அப்துல்லாவுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா நன்றி தெரிவித்துள்ளார்.

 

இஸ்ரேல்-பாலஸ்தீன நேரடிப் பேச்சு மீண்டும் தொடங்கியுள்ளது குறித்து ஆலோசிப்பதற்கு இரு தலைவர்களுக்கு ஒபாமா அழைப்பும் விடுத்துள்ளார்.

Dinamani