இஸ்லாத்துக்கு எதிராக போர் நடத்தவில்லை: அமெரிக்க அதிபர் ஒபாமா

14/09/2010 15:09

தீவிரவாதத்துக்கு எதிரான போரைத்தான் நாம் நடத்தி வருகிறோம். இதன் நோக்கம், தீவிரவாதிகளை ஒடுக்குவது தானே தவிர, இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவது இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தெரிவித்தார்.

அமெரிக்காவில் நியுயார்க்கில் உள்ள இரட்டை கோபுர கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் விமானத்தை கடத்தி மோதச்செய்து தகர்த்தனர். இதில் 3 ஆயிரம் பேர் பலியானார்கள். இதுதவிர, வாசிங்டனில் உள்ள பென்டகன் ராணுவத் தலைமையகத்திலும், பென்சில்வேனியாவில் உள்ள ஷாங்கஸ்வில்லே என்ற இடத்திலும் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த சம்பவம் 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்தேதி நடந்தது. இது நடந்த 9-வது நினைவு தினத்தை யொட்டி, நியூயார்க்கில் இரட்டை கோபுர கட்டிடங்கள் தகர்க்கப்பட்ட இடத்தில் நினைவு தின நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜோ பிடேன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் இறந்து போனவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 8.46 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில் பலியானவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

பென்டகனில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சு, அமெரிக்காவில் எழுந்து வரும் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கை கண்டிக்கும் வகையில் இருந்தது. அவர் பேசியதாவது:-

அமெரிக்கர்களாகிய நாம் இஸ்லாத்துக்கு எதிராக போர் நடத்தவில்லை. போர் நடத்தவும் மாட்டோம். செப்டம்பர் மாதம் இதே நாளில் மதம் நம்மை தாக்கவில்லை. அல்கொய்தா தீவிரவாதிகள் தான் தாக்கினார்கள். அந்த மதத்தின் கொள்கைகளில் இருந்து விலகிப்போன சில மனிதர்கள் தான் நம்மை தாக்கினார்கள். அவர்கள் தான் வெறுப்பை உமிழ்கிறார்கள் என்றால் அவர்களை பார்த்து நாமும் அவர்கள் மீது வெறுப்பை உமிழக்கூடாது. அவர்களின் வெறுப்புக்கு நாம் அடிபணிந்து விடக்கூடாது. தீவிரவாதிகளை ஒடுக்குவது தான் நம் நோக்கமே தவிர, இஸ்லாத்தை எதிர்ப்பது அல்ல.

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா. இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம். ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர். இவ்வாறு ஒபாமா பேசினார்.

Tamil Koodal